Skip to main content

“கோரிக்கையை நிறைவேற்றித் தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன்” - துரை வைகோ எம்.பி. பேச்சு!

Published on 23/05/2025 | Edited on 23/05/2025
Durai Vaiko MP Says I will make every effort to fulfill the demand

அம்ரிட் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்ட ஶ்ரீரங்கம் ரயில் நிலையத்தை காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (22.05.2025) காலை 09:30 மணியளவில் திறந்து வைத்தார். இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக மதிமுகவின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான துரை வைகோ கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “ இந்த விழாவில் உரையாற்றிய முன்னாள் ராணுவ வீரர் அவர்கள் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார். அதில், இன்னாள்,  முன்னாள் ராணுவ வீரர்களுக்கான கோட்டா ரயில் பயண முன்பதிவில் ஒதுக்கித்தரும் இடங்கள் போதுமானதாக இல்லை. அதனை அதிகப்படுத்தித்தருமாறு கேட்டுள்ளார்.

ராணுவ வீரர்கள் இல்லாமல், நாடு இல்லை; நாடு இல்லாமல், நாம் இல்லை. எனவே ஒன்றிய அமைச்சருக்கு இந்த கோரிக்கையை நான் எடுத்துச் சென்று நிறைவேற்றித் தர அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன் என்று இந்தக் கூட்டத்தின் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன். இரண்டு கோரிக்கைகளை  திருச்சி ரயில்வே கோட்ட மேலாளருக்கு நான் நினைவுபடுத்த விரும்புகிறேன். முதலில், திருச்சி மாநகர் மற்றும் அருகில் உள்ள மணப்பாறை, பூங்குடி, இனாம்குளத்தூர் போன்றவை மதுரை ரயில்வே கோட்டத்திலும், ஜீ ஆர் புரம், முத்தரசநல்லூர் உள்ளிட்ட சில பகுதிகள் சேலம் இரயில்வே கோட்டத்தில் உள்ளது. இதனால் நிருவாகரீதியாக உள்ள சிரமங்களை நீக்க அந்த பகுதிகளை திருச்சி ரயில்வே கோட்டத்தோடு இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

மலைக்கோட்டை விரைவு இரயில் திருச்சியில் ஒன்றாம் எண் நடைமேடையில் வந்து நிற்கும்படி கோரிக்கை வைத்திருந்தேன். அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு சிறிது நாட்கள் அந்த நடைமேடையில் வந்து நின்றது. ஆனால் இப்போது மீண்டும் நான்காம் நடைமேடைக்கு மாற்றப்பட்டுவிட்டது. அதிகாலை 4:50க்கு சென்னையிலிருந்து வந்து சேரும் அந்த ரயிலில் முதியவர்களும் பெரியவர்களும் நான்காம் நடைமேடையிலிருந்து வெளியேறுவதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். எனவே மலைக்கோட்டை விரைவு ரயிலை மீண்டும் ஒன்றாம் எண் நடைமேடையில் நிற்கும்படி ஆவன செய்ய வேண்டுமாய் இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன்” எனப் பேசினார்.

சார்ந்த செய்திகள்