
உலகப் புகழ் பெற்ற 'கேன்ஸ் திரைப்பட விழா' பிரான்ஸ் நாட்டில் உள்ள கான் நகரில் 1946 முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான 78வது கேன்ஸ் விழா கடந்த மே 13 முதல் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் படங்கள் திரையிட்டும் விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு மலையாள திரைப்பட இயக்குநர் பாயல் கபாடியா நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ளார். இந்த விழாவில் ஹாலிவுட் நடிகர் டென்ஸல் வாஷிங்டனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான தங்கப்பனை விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் சிவப்புக் கம்பள அணிவகுப்பு பிரபலமாக பார்க்கப்படும் நிலையில் ஆண்டுதோறும் இதில் இந்திய பிரபலங்களும் கலந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்து 20 வருடங்களுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் தனது தனித்துவமான ஆடையின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் இந்தாண்டும் நம் நாட்டின் பாரம்பரிய வெள்ளை நிற புடவை அணிந்து நெற்றியில் சிந்தூர் இட்டு கவனம் பெற்றார். இதே போல் நடிகை மற்றும் பிரபல தொகுப்பாளினி சோனம் சாப்ரா, இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை தனது ஆடையில் குறிப்பிட்டு சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொண்டார். இது அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக செய்யப்பட்டது என கூறப்படுகிறது.
இதனிடையே மாடலும் வளர்ந்து வரும் நடிகையான ருச்சி குஜ்ஜர், இந்திய கைவினைத் திறனைக் கொண்டாடும் வகையில் தங்கத்தால் வடிவமைக்கப்பட்ட லெஹங்கா ஆடையை அணிந்திருந்தார். குறிப்பாக அந்த ஆடைக்கு அவர் அணிந்திருந்த நெக்லஸ் பலரது கவனத்தை ஈர்த்தது. ஏனென்றால் அதில் பிரதமர் மோடி முகம் இடம் பெற்றிருந்தது. இந்த ஆடை தொடர்பாக அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்ட அவர், “78வது கேன்ஸ் திரைப்பட விழா 2025 இல் எனது நாட்டையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதை நான் பெருமையாகக் கருதுகிறேன். கேன்ஸில் இந்த சர்வதேச வாய்ப்பைப் பெற்றதில் மிகவும் பாக்கியசாளியாக உணர்கிறேன். இந்த லெஹங்கா ஆடை, எனது கலாச்சாரத்தின் நம்பகத்தன்மையைக் குறிக்கிறது. மேலும் இந்த பிரமிக்க வைக்கும் ஜரிகாரி பந்தனி அடிப்படையிலான துப்பட்டா எனது ராஜஸ்தான் மாநிலத்தின் அழகைக் குறிக்கிறது” என்றுள்ளார். மேலும் நெக்லஸ் குறித்து ஒரு ஆங்கில ஊடகத்திடம் பேசிய அவர், இந்தியாவை புதிய உயரங்களுக்கு அழைத்துச் சென்ற பிரதமரை கௌரவிக்க விரும்பி இப்படி செய்ததாக கூறினார்.
இவர் ராஜஸ்தானை பூர்விகமாகக் கொண்டவர். இப்போது சினிமாவில் பணிபுரிய வேண்டி மும்பையில் வசித்து வருகிறார். 2023ஆம் ஆண்டு மிஸ் ஹரியானா அழகி பட்டத்தை வென்றிருந்தார். பின்பு ஆல்பம் வீடியோவில் நடித்திருந்தார். இவர் முதல் முறையாக கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.