
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் திட்ட கமிஷனுக்கு மாற்றாக நிதி ஆயோக் எனும் அமைப்பு 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குதல், திட்டங்களை வடிவமைத்தல் போன்ற முக்கிய பணிகளைச் செய்து வருகிறது. இந்த அமைப்பின் தலைவராகப் பிரதமர் நரேந்திர மோடி (ex officio chairman) செயல்படுகிறார். அனைத்து மாநிலங்கள் மற்றும் சட்டமன்றங்களுடன் கூடிய யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் பிற யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களைக் கொண்ட நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு குழு அமைக்கப்பட்டது.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஆட்சி மன்ற குழுவின் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ‘2047இல் வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற தலைப்பில், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம், மரபு சாரா எரிசக்தி உருவாக்கம் போன்றவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த ஆண்டுக்கான நிதி ஆயோக் கூட்டம் நாளை (24.05.2025) டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் தங்களது மாநிலங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு தொடர்பான கோரிக்கைகளை முன்வைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது.
அந்த வகையில் இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளார். இதற்காக இன்று (23.05.2025) இரவு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு சார்பில் தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதி குறித்து அவர் வலியுறுத்திப் பேச உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக மத்திய கல்வித்துறை அமைச்சகத்திற்கு எதிராகத் தமிழக அரசு சார்பில், பி.எம். ஸ்ரீ திட்டம், சமக்ர சிக்ஷா அபியான் திடத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதியை மத்திய அரசு நிறுத்திவைத்துள்ளது சட்ட விரோதம் ஆகும் எனத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத காரணத்தால் மாணவர்களுடைய நலனுக்காக வழங்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது என்பது சட்ட விரோதம் ஆகும். இது போன்ற மாணவர்களுக்கு எதிரான போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய 2 ஆயிரத்து 291 கோடி ரூபாயை விடுவிப்பதற்கான உத்தரவை மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாத ஒரே காரணத்திற்காக மாநில அரசிற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி வைப்பது என்பது அரசியலமைப்பு பிரிவுகளுக்கு எதிரான செயலாகும்” ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.