Water level of Erode district dams rises

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை விட பாசனங்களுக்கு அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

Advertisment

இந்நிலையில் தற்போது பாசனங்களுக்கு நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாலும், நீர்ப்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததாலும் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 69.73 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு இன்று காலை 1, 216 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பவானிசாகர் அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 கன அடி நீரும் என மொத்தம் 105 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி குண்டேரிப்பள்ளம் அணையின் நீர்மட்டம் 25.77 அடியாக உள்ளது. அதேபோல் வரட்டுபள்ளம் அணையின் நீர்மட்டம் 24.64 அடியாக உள்ளது. 30 அடி கொள்ளளவு கொண்ட பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 16.47 அடியாக உள்ளது

Advertisment