இந்த ஆண்டு பட்டாசு விற்பனை 60 சதவீதம் குறைவு: ஏ.எம்.விக்ரமராஜா
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா கூறியதாவது:

அடுத்த ஆண்டாவது அரசு அதிகாரிகள் இது போன்ற குளறுபடிகள் இல்லாமல் பட்டாசு விற்பனை செய்வதற்கு உரிமம் வழங்குவதை ஒழுங்குமுறை படுத்த வேண்டும். ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் போது, பட்டாசு மீதான வரி 14 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் பட்டாசு வாங்குவதை தவிர்த்துவிட்டனர்.
பட்டாசு வாங்கியவர்களிலும் 90 சதவீதத்தினர் கடன் அட்டைகள்(கிரெடிட் கார்டு) மூலமாகவே வாங்கி உள்ளனர். இது மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளதை காட்டுகிறது. கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனையான பட்டாசு இந்த ஆண்டு 60 சதவீதம் குறைந்து ரூ.400 கோடிக்கு மட்டுமே விற்பனை ஆகி உள்ளது.
இதனால், பட்டாசு விற்பனையில் முதலீடு செய்த வியாபாரிகள் எஞ்சிய பட்டாசுகளை என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி உள்ளனர். காரணம் பட்டாசுகளை பாதுகாத்து வைக்க முறையான அனுமதி பெற வேண்டும், பாதுகாப்பு வசதி வேண்டும் அதற்கும் உரிமம் பெற வேண்டும் எனவே இந்த ஆண்டு பட்டாசு விற்பனை செய்த வியாபாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் அல்லாடுகிறார்கள்.இவ்வாறு கூறினார்.