
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு கிராமத்தில் இரு தரப்பு இளைஞர்களிடையே கடந்த 5 ந் தேதி கடைவீதியில் ஏற்பட்ட தகராறு ஒரு தரப்பு குடியிருப்பில் மோதலாக வெடித்தது. இந்த சம்பவத்தில் ஆள் இல்லாத ஒரு வீடு, 3 மோட்டார் சைக்கிள்கள் எரிக்கப்பட்டது. மேலும் பல மோட்டார் சைக்கிள்கள், கார்கள், அரசு வாகனங்கள் சேதமடைந்தன. போலீசார் முன்னிலையிலேயே தாக்குதல் சம்பவம் நடந்ததாக இருதரப்பினரும் குற்றம்சாட்டினர். இதையடுத்து ஒரு தரப்பில் 21 பேரும் மற்றொரு தரப்பில் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து 8 பேரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் அதிகாரிகள், அரசியல் கட்சியினர் வந்த ஆய்வு செய்து செல்கின்றனர். அந்த வகையில், இன்று தேசிய ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணைய இயக்குனர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோருடன் வடகாடு வந்து மோதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வீடுகள், கார்களை ஆய்வு செய்து அங்கிருந்த பொதுமக்களிடம் விபரங்களை கேட்டறிந்தனர். மேலும் பிரச்சனைக்குரியதாகக் கருதப்படும் கோயில் - கைப்பந்து மைதானத்தையும் குழுவினர் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆணைய இயக்குனர் ரவிவர்மனிடம் வடகாடு சம்பவத்தில் உண்மையில் பாதிப்பு இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. “அதை இப்ப சொல்ல முடியாது. அறிக்கை தாக்கல் செய்யும் போது தெரியும். தொடர்ந்து, சம்மந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்திருக்கிறோம். இன்னும் 2 நாட்களில் அரசுக்கு ஆய்வறிக்கையை கொடுப்போம்” என்று பதிலளித்தார்.
இதனிடையே ஏன் இன்னும் வடகாடு பகுதிக்கு ஆட்சியர் சென்று ஆய்வு செய்யவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இன்று காலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.