Skip to main content

ஜெயலலிதா மரணத்தில் அதிகரிக்கும் மர்மம்: சி.பி.ஐ. விசாரணையே தீர்வு! அன்புமணி

Published on 25/09/2017 | Edited on 25/09/2017
 
ஜெயலலிதா மரணத்தில் அதிகரிக்கும் மர்மம்: 
சி.பி.ஐ. விசாரணையே தீர்வு! அன்புமணி

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை :

''தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, அவரை சசிகலா விடியோ படம் எடுத்து வைத்திருப்பதாகவும் விசாரணை ஆணையத்திடம் அது ஒப்படைக்கப்படும் என்றும் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் கூறியிருக்கிறார். இந்த விளக்கம் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை நீக்குவதற்கு பதிலாக அதிகரித்திருக்கிறது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது அவரை சசிகலா விடியோ எடுத்ததாகவும், அப்போது ஜெயலலிதா உடல் மெலிந்து இருந்ததால் தான் அந்த விடியோவை சசிகலா வெளியிடவில்லை என்றும் கூறியிருக்கிறார். மருத்துவ அடிப்படையில் பார்த்தால்  தினகரனின் இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளும் வகையில் இல்லை. செப்டம்பர் 22&ஆம் தேதி இரவு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயலலிதா திசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் ராஜாஜி அரங்கத்தில்  வைக்கப்பட்டிருந்த போது அவரது உடல் மெலிந்து இருந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்பு ஜெயலலிதா உடல் பருமன் எந்தளவுக்கு இருந்ததோ, அதே அளவில் தான் அவர் உயிரிழந்த போதும் இருந்தது என்பதை மக்கள் அனைவரும் அறிவார்கள்.

ஒருவேளை தினகரன் கூறுவது போன்று, சசிகலா விடியோ எடுக்கும் போது ஜெயலலிதா இளைத்து காணப்பட்டிருந்தால் இறக்கும் போதும் அப்படியே தான் இருந்திருக்க வேண்டும். இடைப்பட்ட காலத்தில் அவரது உடல் பருத்திருப்பதற்கு சாத்தியமில்லை. அவ்வாறு இருக்கும் போது தினகரன் கூறியிருப்பது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. அதுமட்டுமின்றி, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசும் போது, ஜெயலலிதா சிகிச்சை பெறுவதை யாரும் படம் எடுக்கவில்லை என்று கூறியிருந்தார். அதற்கு முற்றிலும் மாறாக, ஜெயலலிதாவை சசிகலாவே விடியோ எடுத்து வைத்திருப்பதாக தினகரன் கூறியிருக்கிறார். இருவரும் கூறுவது முன்னுக்குப் பின் முரணாக இருக்கும் நிலையில் யார் சொல்வதை நம்புவது எனத் தெரியவில்லை.

உடல்நலக் குறைவு காரணமாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களில், அதாவது 27.09.2016 அன்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘‘முதலமைச்சர் ஜெயலலிதா அவரது உடல்நிலை குறித்து காணொலி மூலமாகவோ, வீடியோ பதிவு மூலமாகவோ விளக்கம் அளித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தமிழகத்தில் வீண் பதற்றம் ஏற்படாமலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமலும் தடுப்பதற்கான சேவையாகக் கருதி இதை முதலமைச்சர் ஜெயலலிதா செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தியிருந்தார். அப்போதே மருத்துவமனை நிர்வாகமோ, தமிழக அரசோ, அதிமுகவோ இது குறித்து விளக்கமளித்திருந்தால்  ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த வதந்திகள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால், அப்போது அதை செய்யத் தவறிய அதிமுகவினர் இப்போது ஆளுக்கொரு தகவலை வெளியிட்டு குழப்புகின்றனர்.

துண்டு துண்டாக உடைந்த அதிமுகவின் பல்வேறு அணிகளைச் சேர்ந்தவர்களும் தங்களின் அரசியல் லாபத்திற்காக பல்வேறு தகவல்களை கூறி வருவது ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள ஐயங்களை போக்கவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டு 40 நாட்களாகியும் அதற்கு நீதிபதி நியமிக்கப்படவில்லை. ஜெயலலிதா மரணம் குறித்து அதிமுக அணிகளின் நிர்வாகிகள் கூறும் ஒவ்வொரு விளக்கத்திற்கு பின்னணியிலும் ஓர் அரசியல் கணக்கு உள்ளது. இவை எதுவுமே ஜெயலலிதா மரண மர்மத்தை போக்காது. எந்த ஒரு மனிதரின் மரணமும் சர்ச்சைக்கு  உள்ளாக்கப்படக் கூடாது. ஆனால், தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மரணம், அவரது கட்சியினராலேயே இந்த அளவுக்கு சர்ச்சைக்கு உள்ளாக்கப்படுவது அவரது விசுவாசிகளை வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

எடப்பாடி தலைமையிலான பினாமி அரசு அமைத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையமோ,  சசிகலா தரப்பு வெளியிடவுள்ள விடியோவோ ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தை போக்கப் போவதில்லை. நடுவண் புலனாய்வுப் பிரிவின் (சி.பி.ஐ) விசாரணை மட்டுமே ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்திற்கு விடை காணும் என்பதால் அதற்கு ஆணையிட தமிழக அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.''

சார்ந்த செய்திகள்