Skip to main content

செம்மலை வேடிக்கை பார்த்ததுதான் வேதனையாக இருக்கிறது: பொன்முடி

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
செம்மலை வேடிக்கை பார்த்ததுதான் வேதனையாக இருக்கிறது: பொன்முடி

“காவிரி நீர் செல்லும் வாய்க்கால் முழுவதும் தூர் வாரி விட்டோம்” என்று அப்பட்டமாண பொய்யை அவிழ்த்து விட்டு விவசாயிகளை ஏமாற்றி விடலாம் என்று “செய்யாத ஒரு பணியை செய்தது போல் மேட்டூரில் நின்று மிகப் பிரமாதமாக ஒரு அரங்கேற்றத்தை” செய்திருக்கிறார் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி. அதைப் பாவம் அதிமுக முன்னோடிகளில் ஒருவரான செம்மலை அவர்களும் நின்று வேடிக்கை பார்த்ததுதான் வேதனையாக இருக்கிறது என்று முன்னாள் அமைச்சர் க.பொன்முடி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேட்டூர் அணையிலிருந்து அக்டோபர் 2-ஆம் தேதி தண்ணீர் திறந்து விட்டு, “காவிரி நீர் செல்லும் கால்வாய்கள் முழுவதும் தூர் வாரப்பட்டுள்ளது. திறந்து விடப்பட்டுள்ள நீரை விவசாயிகள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என்று பேட்டியளித்திருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி. காவிரி மஹாபுஷ்கர விழாவிற்கு தண்ணீர் திறந்து விட்டு, அதில் முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி நீராடியதற்கு விவசாயிகள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் எழுந்த கடும் எதிர்ப்பினை திசை திருப்பும் வகையில், “செய்யாத ஒரு பணியை செய்தது போல் மேட்டூரில் நின்று மிகப் பிரமாதமாக ஒரு அரங்கேற்றத்தை” செய்திருக்கிறார் அமைச்சர். அதைப் பாவம் அதிமுக முன்னோடிகளில் ஒருவரான செம்மலை அவர்களும் நின்று வேடிக்கை பார்த்ததுதான் வேதனையாக இருக்கிறது.

 

காவிரி நதி நீர் பிரச்சினைக்காக நடுவர் மன்றம் அமைத்தது; இடைக்கால தீர்ப்புப் பெற உச்சநீதிமன்றத்தின் ஆணை பெற்றது; இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நதிநீர் ஆணையத்தை அமைத்தது, பிறகு இறுதி தீர்ப்பினைப் பெற்றது, அதை அரசிதழில் வெளியிட ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு அழுத்தம் கொடுத்தது என்று எண்ணற்ற நடவடிக்கைகளை தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள்தான் எடுத்தார் என்பதை விவசாயிகள் நன்கு அறிவர். ஏன் முதன்முதலில் காவிரி கால்வாய்களை கடைமடைப் பகுதி வரை தூர் வாரி, டெல்டா விவசாயிகளின் நெஞ்சத்தில் பால் வார்த்த தலைவர் எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள். ஆனால் இறுதி தீர்ப்பின்படி உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் கோட்டை விட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கர்நாடக மாநிலத்திடமிருந்தும் தண்ணீரை பெற தவறி, 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைக்கு வித்திட்ட அரசு இந்த அதிமுக அரசு என்பதை மூடி மறைக்க முயற்சித்து, விவசாயிகளின் முன்பு மூக்கு உடைபட்டுள்ளார்கள் என்பதுதான் உண்மை. தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் அழுத்தம் திருத்தமாக கூற தத்தளிக்கும் அதிமுக அரசு நெஞ்சை நிமிர்த்துவது போல் “போலி” வேடம் போடுவதை முதலில் கைவிட வேண்டும். 

தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்ப சூழ்நிலை கருதி எங்கள் தளபதி நேரடியாக அந்த குடும்பங்களுக்கு சென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிதியுதவி அளித்து ஆறுதல் கூறினார். ஆனால் இறந்து போன விவசாயிகளின் வீடுகள் பக்கமாகக் கூட எட்டிப்பார்க்காத அதிமுக அமைச்சர்கள் இன்றைக்கு விவசாயிகளுக்காக சாதனைகள் புரிந்து விட்டதாக “சாத்தான் வேதம் ஓதுவது போல்” பேசுவது  ஏற்கனவே வறுமையிலும், வேதனையிலும் வாடிக் கொண்டிருக்கும் அவர்களின் இதயத்தில் மேலுமொரு “பொய்” தாங்கிய ஈட்டியைப் பாய்ச்சுவது போலாகும் என்பதை அமைச்சர்கள் உணர வேண்டும். மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் அறிக்கை பெற்று, இறந்து போன விவசாயிகள் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும் என்று சட்டமன்றத்திலேயே அறிவித்து விட்டு பின்வாங்கியிருப்பது இந்த அரசு. உயர்நீதிமன்றமே விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள் என்ற பிறகும் உச்சநீதிமன்றம் சென்று தடை பெற்றது முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி தலைமையிலான குதிரை பேர அரசு. தேசிய வங்கிகளில் வாங்கப்பட்ட கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு பிரதமரிடம் ஒரு சந்திப்புகூட பெற்றுத்தர வக்கில்லாத இந்த அரசு “விவசாயிகளின் நண்பன்” போல் போடும் அவதாரம் எடுப்பதை ஒரு போதும் விவசாயிகள் ஏற்கமாட்டார்கள். 

இந்த சூழ்நிலையில் “காவிரி நீர் செல்லும் வாய்க்கால் முழுவதும் தூர் வாரி விட்டோம்” என்று அப்பட்டமாண பொய்யை அவிழ்த்து விட்டு விவசாயிகளை ஏமாற்றி விடலாம் என்று புதிய கணக்கு போடுகிறார் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி. இன்னும் சொல்லப் போனால் 28.9.2017 அன்று முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையிலேயே காவிரி தூர் வாரியது பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. ஏனென்றால் அதிமுக ஆட்சியில் காவிரியில் தூர் வாரப்படவில்லை என்று பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் அவருக்குத் தெரியும். காவிரி டெல்டா பகுதிகளில் நீர்பாசன வசதிகளை நவீனமயமாக்கப் போகிறோம் என்று மூன்று நான்கு வருடங்களாக அறிவித்து விட்டு இன்னும் ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவிடவில்லை என்பதும் பொதுப்பணித்துறை அமைச்சரான அவருக்குத் தெரியும். ஆனால் இலாகாவிற்கே சம்பந்தம் இல்லாத அமைச்சர் “காவிரியில் தூர் வாரி விட்டோம்” என்று ஒரு கட்டுக்கதையை அவிழ்த்து விடுவது, “கேழ்வரகில் நெய்வடிகிறது” என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. ஆகவே அமைச்சர் தங்கமணிக்கு உள்ளபடியை அதிகாரம் இருக்கும் “வெறும் வாய்பந்தல்” போடுவதை தவிர்த்து விட்டு, தற்கொலை செய்து கொண்ட 400க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு முதலில் மாநில அரசின் நிதியுதவியை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்