
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ''எல்லோருக்கும் வணக்கம். இன்றைக்கு மகளிர் தினம் தமிழ்நாடு முழுக்க இருக்கிற என்னுடைய அம்மா, அக்கா, தங்கச்சி, தோழி என அத்தனை பேருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்வதை மறுக்க முடியாது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய மகளிர் தின வாழ்த்துக்கள். சந்தோஷம்தானே... பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும். பாதுகாப்பற்ற நிலை இருக்கும் போது எந்த சந்தோஷமும் இருக்காது என நீங்கள் நினைப்பது புரிகிறது.
என்ன செய்ய நீங்க, நாம, எல்லாருமே சேர்ந்துதான் இந்த திமுக அரசைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர்கள் இப்படி ஏமாற்றுவார்கள் என இப்போது தானே தெரிகிறது. எல்லாமே இங்கு மாறக் கூடியது தானே. மாற்றத்திற்கு உரியது தானே. கவலைப்படாதீர்கள் 2026 இல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து, நாம் எல்லோரும் சேர்ந்து பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யத் தவறிய இவர்களை மாற்ற மகளிர் தினமான இன்றைக்கு நாம் உறுதி ஏற்போம். ஒன்று மட்டும் சொல்கிறேன் எல்லா சூழ்நிலையிலும் உங்களுடைய மகனாக, அண்ணனாக, தம்பியாக, தோழனாக உங்களுடன் நான் நிற்பேன். நன்றி வணக்கம்'' என தெரிவித்துள்ளார்.
முன்னதாக அறிக்கையில் ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் என தெரிவித்து வந்த விஜய் இந்த வீடியோ மூலமாக திமுக என ஒரு கட்சி பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.