Skip to main content

பாசனத்து தண்ணீர் திறக்க கோரி கூலி தொழிலாளி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
பாசனத்து தண்ணீர் திறக்க கோரி கூலி தொழிலாளி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல்



கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் முதியவர் ஒருவர் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனையொடுத்து போலீசார் அவரிடம் பேசி மரத்தில் இருந்து இறக்கினர்.

காட்டுமன்னார்கோவில் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையில் நடுவர் நீதிமன்றம் எதிரே அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வேப்பமரத்தில் மரத்தில் 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் பெட்ரோல் பாட்டிலுடன் ஏறி பாசனத்திற்கு கல்லணை, கீழணை ஆகியவற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறி மிரட்டல் விடுத்தார். மரத்தில் யாரவது ஏறி வந்தால் கீழே விழுந்து தற்கொலை செய்துகொள்வேன் என்றும் மிரட்டினார். இதனை அறிந்து அப்பகுதியில் பொதுமக்கள் கூட்டம் கூடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து தகவல் அறிந்த காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று அந்த முதியவரிடம் விரைவில் தண்ணீர் திறக்க அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுக்கிறோம் இறங்கி வாருங்கள் என்று கூறினர். அதற்கு அந்த முதியவர் ஆட்சியே சரியில்லை ஆட்சியாளர்கள், மக்களை கண்டுகொள்ளவில்லை எப்படி தண்ணீர் திறக்க அதிகாரிகள் முன்வருவார்கள் என கூறி இறங்கி வர மறுத்துவிட்டார். போலீசார் மற்றும் பொதுமக்களுடன் நின்றுகொண்டிருந்த விவசாய சங்க தலைவர் இளங்கீரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட முதியவரிடம் தொடர்ந்து பேசி இன்னும் மூன்று தினங்களில் தண்ணீர் திறக்கப்படும் என்று கூறி உறுதி அளித்தனர். 

இதனையொடத்து பெட்ரோல் பாட்டிலுடன் முதியவர் மரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அந்த முதியவர் பெயர் இந்திரஜித் (61) என்றும் அவர் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வேளம்பூண்டி கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி தொழிலாளி என்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்காததால் கூலிவேலை கிடைக்கவில்லை, இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. குடும்பத்தை நடத்த கூட முடியவில்லை. இதன் காரணமாகவே போராட்டம் செய்யவேண்டும் என்ற நோக்கத்திலேயே வந்ததாக தெரிவித்தார். பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கூறி முதியவர் ஒருவர் மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லணையில் கடந்த 5ம் தேதி கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் தண்ணீர் இன்னும் கீழணைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

-காளிதாஸ்

சார்ந்த செய்திகள்