
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கும், விரைவில் நடைபெறவுள்ள பத்திரிகையாளர் மன்றத் தேர்தலுக்கும் நிரந்தர தடை விதிக்கக் கோரி விஸ்வநாத் என்பவரால் சென்னை உயர்நிதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் மற்றும் 12 உறுப்பினர்களைக் கொண்ட வழிகாட்டு கமிட்டியின் சார்பாக மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் மற்றும் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் இருவரும் ஆஜராகினர். விசாரணையின்போது, வழக்கறிஞர் வில்சன், 'சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்குக் கடந்த 25 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படவில்லை என்றும், ஒரு குறிப்பிட்ட நபர்கள் மன்றத்தை ஆக்கிரமித்து, அவர்களின் தனிப்பட்ட ஆதாயத்திற்காக அதனைப் பயன்படுத்திவருகின்றனர் என வாதிட்டார்.
மேலும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தின் விவரத்தையோ, தேர்தல் தொடர்பான அறிவிப்பையோ, அல்லது வேட்பாளர் பட்டியலையோ இந்த மனு எதிர்க்கவில்லை ஆகையால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் வாதிட்டார்.
இதனைத் தொடர்ந்து மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் சிங்காரவேலன் ஆஜராகி தனது வாதத்தை முன் வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கிய பிறகு, இதை எதிர்க்கக்கூடிய எந்த மனுவும் விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், தேர்தல் முடிந்த பிறகு தான் தேர்தலை சட்ட ரீதியாக எதிர்க்க முடியும் என்றும் தீர்ப்பளித்தது.
முடிவில், நீதிமன்றம், மனுதாரரின் மனுவைத் தள்ளுபடி செய்தது. ஆகையால், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்த எந்த விதமான சட்ட தடையும் இல்லை. தேர்தல் அறிவிப்பின் படி, தேர்தல் அலுவலர் முன்னாள் நீதியரசர் பாரதிதாசன் தலைமையில் வரும் 15ஆம் தேதி தேர்தல் நடைபெறும்.