Skip to main content

‘20 லட்சம் மடிக்கணினிகள் கொள்முதல்’ - சர்வதேச டெண்டரை கோரிய தமிழக அரசு!

Published on 23/05/2025 | Edited on 23/05/2025

 

 TN govt requests international tender Purchase of 2 million laptops

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கடந்த 19ஆம் தேதி  (19.5.2025) 2025 - 2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிவிப்பின்படி கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு உயர் நிலைக் குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கோவி. செழியன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை முதன்மைச் செயலாளர் பிரஜேந்திர நவ்நீத், உயர் கல்வித் துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, நிதித்துறை செயலாளர் (செலவினம்) எஸ்.நாகராஜன், கல்லூரிக் கல்வி ஆணையர் எ. சுந்தரவல்லி, தொழில் நுட்பக் கல்வி ஆணையர் ஜெ. இன்னசென்ட் திவ்யா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக மடிக்கணினி வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உயர்கல்வித் துறையின் மூலம் கடந்த மாதம் (22.4.2025) அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு ஒப்பந்த புள்ளிகோரியுள்ளது. 20 லட்சம் மடிக்கணினிகளை கொள்முதல் செய்ய சர்வதேச டெண்டரை அரசின் எல்காட் நிறுவனம் கோரியுள்ளது. அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை டெண்டரை சமர்பிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும்  லேப்டாப்பானது 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6  இஞ்ச் அளவில் டிஸ்பிளே இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் அடுத்த கல்வி ஆண்டில் சேரக்கூடிய மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் ஆகும். 

சார்ந்த செய்திகள்