
அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணிக்குக் கோவை மாவட்டம் குனியம்புத்தூர் பகுதியில் அவரது வீடு உள்ளது. இத்தகைய சூழலில் தான் அவரது வீட்டிற்கு நேற்று (22.05.2025) கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்த கடிதத்தில் அவருக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. அதில், “எஸ்.பி. வேலுமணியிடம் உள்ள கருப்புப் பணத்திலிருந்து ஒரு கோடி ரூபாய் பணத்தை தங்களது அமைப்பிற்குக் கொடுக்க வேண்டும்.
அவ்வாறு கொடுக்கவில்லை எனில் ஜூலை 30ஆம் தேதிக்குள் வெடிகுண்டு வைத்து கொலை செய்து விடுவோம். இந்த பணத்தை மே 25ஆம் தேதி காளப்பட்டி பகுதியில் தாங்கள் சொல்லக்கூடிய இடத்தில் பணத்தை வைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதற்கான வரைபடத்தையும் கடிதத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மிரட்டல் குறித்து அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு சார்பில் மாவட்டச் செயலாளர் தாமோதரன், கோவை மாநகர காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அதில் எஸ்.பி. வேலுமணிக்கு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது. மேலும் எஸ்.பி. வேலுமணிக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட கடிதமும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை சார்பில் மிரட்டல் கடிதம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எஸ்.பி. வேலுமணிக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கோவை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.