
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாகச் சட்டமன்ற தேர்தலுக்கு த.வெ.க.வும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அந்த வகையில் கோவையில் த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் அக்கட்சியின் மேற்கு மண்டல பூத் கமிட்டி கூட்டம் கடந்த மாதம் (26 மற்றும் 27.04.2025) நடைபெற்றது. இந்த கூட்டமானது கோவையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்டு, தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான செயல்பாடுகள் குறித்தும், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணிகள் குறித்தும், அது தொடர்பாகக் கட்சி சார்ந்து மேற்கொள்ள வேண்டிய கடமைகள் குறித்தும் விளக்கவுரை ஆற்றியிருந்தார். அதில், “நம்மிடம் நேர்மை இருக்கிறது. கறைபடியாத அரசியல் செய்ய வேண்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. லட்சியம் இருக்கிறது. உழைப்பதற்குத் தெம்பு இருக்கிறது. பேசுவதற்கு உண்மை இருக்கிறது. செயல்படுவதற்குத் திறமை இருக்கிறது. அர்ப்பணிப்பு குணம் இருக்கிறது. களம் தயாராக இருக்கிறது. இதற்கு மேல் என்ன இருக்கிறது?. போய் கலக்குங்கள். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” என்று பேசியிருந்தார்.
அதே சமயம் வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை அரசியல் கட்சிகளுக்குச் சின்னங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்காக அரசியல் கட்சிகள் தேர்வு செய்ய 190 சின்னங்களைத் தேர்தல் ஆணையம் பட்டியலிட்டு வைத்துள்ளது. இந்நிலையில் த.வெ.க.வின் கட்சி சின்னத்தைத் தேர்வு செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தேர்தல் ஆணையத்திடம் என்ன சின்னத்தைக் கேட்டுப் பெறலாம் என அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்காக வாக்காளர்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்கும் வகையில் சின்னம் இருக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுமாறு விஜய் வலியுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.