Skip to main content

காதலித்ததைத் தட்டிக் கேட்டவருக்கு இரவில் நேர்ந்த கொடூரம்!

Published on 23/05/2025 | Edited on 23/05/2025

 

Man incident after hearing brother's love for daughter
மணி - காளிதாஸ்

கடலூர் மாவட்டம் சிதம்பரம்,  அண்ணாமலை நகர், மேல்கரை வெள்ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மகன் காளிதாஸ்(40). இவர் சிதம்பரம் கனகசபை நகர் போகும் வழியில் முடி திருத்தும் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்றும் இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு கிளம்பியபோது, திடீரென கடைக்குள் புகுந்த மர்ம நபர் அவரை காளிதாஸை வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சிதம்பரம் டி.எஸ்.பி. லாமேக் மற்றும் போலீசார் கடைக்குள் படுகொலை செய்யப்பட்டு கிடந்த காளிதாஸின் உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், “காளிதாஸின் அண்ணன் மகளை பாண்டிச்சேரியைச் சேர்ந்த அவர்களின் உறவினரான மணி என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை காளிதாஸ் தட்டிக் கேட்டுள்ளார். மணியும் காளிதாஸின் முடி திருத்தும் கடையில்  தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் காளிதாஸ் மணியை கடைக்கு வர வேண்டாம் என்று கூறி வேலையை விட்டு நிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணி காதலுக்கு இடையூறாக இருக்கும் காளிதாஸை வெட்டிக் கொலை செய்யப் பல மாதங்களாக திட்டுமிட்டு வந்தாக கூறப்படுகிறது.

அதன்படி நேற்று(22.5.205) இரவு காளிதாஸ் கடைக்குச் சென்ற மணி கடையின் ஷட்டரை உள் பக்கமாக மூடிவிட்டு வெட்டி படுகொலை செய்துவிட்டுத் தப்பித்துச் சென்றதாக கூறப்படுகிறது. தப்பித்துச் சென்ற மணியை புதுச்சேரியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால், காளிதாஸின் உறவினர்கள் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் வெட்டி படுகொலை செய்ததாக தெரிவிக்கின்றனர். அதனால் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் மட்டுமே உண்மை வெளியே வரும் என்று கூறுகின்றனர்.

சிதம்பரத்தில் நள்ளிரவில் காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி முடி திருத்தும் தொழிலாளியை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்