Skip to main content

அசுர வேகம் – 2 கல்லூரி மாணவிகளை பலி எடுத்த டிரைவர்

Published on 03/10/2017 | Edited on 03/10/2017
அசுர வேகம் – 2 கல்லூரி மாணவிகளை பலி எடுத்த டிரைவர்



திண்டுக்கல் மாவட்டம், கிழக்கு மரியநாதபுரத்தை சேர்ந்த பிரான்சிஸ் லாசர் என்பவரின் மகள் செல்சியா ராணி (வயது 18). இவர் சிறுகனூரில் உள்ள எம்.ஏ.எம். என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு இ.சி. படித்து வந்தார்.

இதேபோல அரியலூர் மாவட்டம் கீழப்பளூர் அண்ணாநகரை சேர்ந்த தனபால் மகள் இலக்கியாவும் (18), அதே கல்லூரியில் படித்து வந்தார். இருவரும் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர்.

ஆயுதபூஜை, காந்தி ஜெயந்தி உள்ளிட்ட தொடர் விடுமுறை முடிந்து, கல்லூரி திறக்கப்படுவதையொட்டி நேற்று இரவு இருவரும் கல்லூரி விடுதிக்கு வந்தனர். பின்னர் அவர்கள் விடுதியில் இருந்து வெளியில் வந்து, எதிர்புறத்தில் இருக்கும் பஸ் நிறுத்தத்திற்கு செல்வதற்காக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த ஒரு கார், அவர்கள் இருவர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்சியா ராணியும், இலக்கியாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள், பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இந்த பகுதியில் 10க்கு மேற்பட்ட கல்விநிறுவனங்கள் இருக்கிறனர். இதனால் நள்ளிரவு வரை இந்த பகுதியில் மாணவர்களின் நடமாட்டம் இருக்கும்.

ஆனால் இந்த கல்வி நிறுவனங்கள் இருக்கும் இந்த பகுதியில் சாலையில் மின் விளக்கு என்பதே இல்லை. இந்த விபத்திற்கு முக்கிய காரணம் இது தான் என்கிறார்கள்.

இதனாலயே இங்கு மாணவர்கள் விபத்து மரணம் என்பது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் இன்று போராட்டம் நடத்தும் நிலையில் இருக்கிறார்கள்.

- ஜெ.டி.ஆர்

சார்ந்த செய்திகள்