Skip to main content

பசுமை வழிச்சாலைக்காக மக்களின் ஆசையை தூண்டும் அரசாங்கம்!

Published on 23/06/2018 | Edited on 23/06/2018
farmers


சதுரங்கவேட்டை படம் நாம் அனைவரும் பார்த்திருப்போம், அதில் நாயகன் ஒருயிடத்தில், ஒருத்தரை ஏமாத்தனும்னா, நாம அவுங்க ஆசையை தூண்டனும், அந்த ஆசையை தூண்டி அவுங்க யோசிக்கறதுக்கு முன்னாடி நாம நம்ம வேலையை முடிச்சிக்கனும் என்பார். இதைத்தான் தற்போது சேலம் டூ சென்னை பசுமைவழி விரைவுச்சாலைக்காக அரசாங்கத்தின் சார்பில் மக்களிடம் ஆசை வார்த்தைகளை கூறுகிறார்கள் அதிகாரிகள்.

கடந்த 22ந்தேதி மாவட்ட ஆட்சியர் அரங்கத்தில் மாதந்தோறும் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்துக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நூற்றுக்கும் அதிகமானவர்கள் வருகை புரிந்துயிருந்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் பிரச்சனை செய்யலாம் என எதிர்பார்த்து 100 போலீஸார் கலெக்டர் அலுவலகம், கூட்டம் நடைபெற்ற அரங்கத்தின் வெளியே, உள்ளே என பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். அதோடு உளவுத்துறை போலீஸார் 5 பேர் கண்காணித்துக்கொண்டு இருந்தனர்.

 

 

மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் கூட்டம் தொடங்கியதும், விவசாய சங்க பிரமுகரான அழகேசன், சேலம் டூ சென்னை பசுமை வழி விரைவுச்சாலை தொடர்பாக கலெக்டரிடம், எத்தனை கி.மீ க்கு இந்த சாலை இந்த மாவட்டத்தில் பயணமாகிறது?, இந்த சாலையின் அகலம்மென்ன?, இந்த சாலைக்கு தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது என்கிறீர்கள், அது எவ்வளவு உயரம் அமைக்கப்படபோகிறீர்கள்?, எவ்வளவு நிலங்கள் எடுக்கப்படவுள்ளன?, எவ்வளவு காடுகள் அழிக்கப்படுகிறது?, என பல்வேறு கேள்விகளை அடுக்கினார். அப்போது அவர் கேட்ட கேள்விகளை கலெக்டர் கேட்டுக்கொண்டுயிருக்க ஆளும்கட்சிக்கு சாதகமான விவசாய அமைப்பினர் சிலர், இந்து இயக்கத்தை சேர்ந்தவர்கள் சிலர் இதையெல்லாம் கேட்காது, இது நல்ல திட்டம் என குரல் கொடுத்தனர். இதற்கு பெரும்பான்மை விவசாயிகள், வேறு அமைப்பினர் எதிர்ப்பு குரல் கொடுத்து நீங்க பேசுங்க எனச்சொல்ல பேசத்துவங்கினர்.

கூட்ட முடிவில் நான் இதுக்கு பதில் சொல்றன் என்றார். மதியம் 1.30 மணியளவில் கலெக்டர் கந்தசாமி, நாம் வளர்ச்சியை நோக்கி செல்ல வேண்டும். ஒருக்காலத்தில் சென்னை டூ மதுரை சாலை, சென்னை டூ பெங்களுரூ சாலை அமைக்கப்பட்டபோது தினமும் 40 ஆயிரம் வாகனங்கள் தான் பயணமாகும் (!) என எதிர்பார்த்து 2001-2002 காலக்கட்டத்தில் அந்த சாலை அமைக்கப்பட்டது. ஆனால் இன்று 80 ஆயிரம் வாகனங்கள் பயணமாகிறது. இதனால் போக்குவரத்து நெருக்கடி, விபத்துக்கள் அதிகரித்து உள்ளன. இருக்கும் சாலைகளை அகலப்படுத்தலாம் என அரசு நினைத்தபோது, சென்னை டூ செங்கல்பட்டு வரை 20 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுகிறது, (அவ்வளவு விவசாய நிலங்கள் எங்கே அந்த சாலையில் இருக்கிறது ) 1.25 கடைகள், வீடுகள் பாதிக்கப்படுகின்றன. அதனால் அந்த திட்டம் சரியாக வராது என்றே புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. சேலம் டூ சென்னை புதிய எக்ஸ்பிரஸ் சாலை அமைப்பால் சுமார் 55 கி.மீ குறையும், நேரம் குறையும், தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். ( விவசாயம் அழியும்மே சார் )

இந்த சாலை திருவண்ணாமலை மாவட்டத்தில் 124 கி.மீ பயணமாகிறது. இந்த சாலையின் அகலம் 70 மீட்டர், 9 இடத்தில் இணைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இந்த சாலைக்காக 861 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்படபோகிறது. அதில், அரசுக்கு சொந்தமான நிலம் 153 ஹெக்டர், 18 ஹெக்டர் வனத்துறைக்கு சொந்தமானது, 690 ஹெக்டர் விவசாயிகள் நிலம். அதில் 549 ஹெக்டர் வானம் பார்த்தபூமி, 141 ஹெக்டர் மட்டும்மே விவசாய நிலம். அதனால் விவசாயம் பாதிக்கப்படும் என யாரும் கவலைப்பட வேண்டாம். (141 ஹெக்டர் விவசாய உற்பத்தியை எப்படி ஈடுக்கட்டுவீர்கள்?)
  dist


கடந்த காலத்தில் நம் நாட்டில் உணவு பஞ்சம் ஏற்பட்டது. இப்போது அப்படியொரு நிலைமை கிடையாது. (மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்தியபிரதேச மாநிலத்தில் வருடத்துக்கு 10 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துக்கொள்கிறார்கள், உணவு பற்றாக்குறையால் இந்தியாவில் ஆண்டுக்கு 20 ஆயிரம் குழந்தைகள் இறப்பதாக புள்ளிவிபரம் உள்ளதாம்) அதற்கு காரணம் விவசாயப்புரட்சி. இப்போது டெக்னாலஜி புரட்சி உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் எவ்வளவு அதிகளவு மகசூல் கொண்டு வரமுடியும், அதனால் விவசாய உற்பத்தி பாதிக்கப்படாது என்றவர். ஒரு ஏக்கர் நிலம் கையகப்படுத்தினால் அரசு வழிக்காட்டி மதிப்பு அல்லது அருகில் உள்ள இடம் பதிவு செய்யப்பட்ட தொகையின் அடிப்படையில் ஒன்னரை மடங்கு அதிகமான இழப்பீட்டு தொகை வழங்கப்படும், ஒரு கிணறு மூடப்பட்டால் 3.5 லட்சம், ஒரு தென்னை மரம் வெட்டப்பட்டால் 80 ஆயிரம் (அடேங்கப்பா), பனைமரம் உட்பட பிற மரங்கள் வெட்டப்பட்டால் 2 ஆயிரம், ஒரு வாழை மரத்துக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். நஷ்டயீடு வேண்டாம், நிலம் வேண்டும் எனக்கேட்டால் அரசு நிலங்கள் இருந்தால் வழங்கப்படலாம், வீட்டு மனையும் வழங்கப்படலாம். மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தும் வழக்கம்மில்லை, அதனால் நடத்தவில்லை. 21ந்தேதி வரை எங்களுக்கு இந்த திட்டத்தை எதிர்த்து ஒரே ஒரு எதிர்ப்பு மட்டும் தபாலில் வந்துள்ளது என்றார்.

அதோடு இந்த மாவட்டத்தில் கிராமப்புற சாலைகளை இணைக்க புதியதாக 93 சாலைகள் போடப்பட்டுள்ளன, இதனால் 39 ஹெக்டர் நிலம் பயன்படுத்தப்பட்டது இதுவும் கிராமப்புற வளர்ச்சிக்காக தான் என்றார். (மறைமுகமாக கிராமங்களை வளர்ச்சி பெற வைக்கிறோம் அப்போ நீங்க எதிர்க்கலயே என கேட்டார்). இந்த மாவட்டத்தில் 1450 ஏக்கர் நிலத்தில் 14,550 வீட்டுமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்றார். (அப்போது நீங்கள் எதிர்க்கலயே, இப்போ சாலைக்காக நிலம் போறதுக்காக ஏன் கேள்வி கேட்கறிங்க என்பது போல் இருந்தது). இன்னும் 10, 15 வருடங்களில் திருவண்ணாமலை நகரத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரிக்கும், இந்த வளர்ச்சியை நீங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆகவேண்டும் என்றார்.

 

 

இந்த திட்டத்துக்கு ஜீன் 21ந்தேதி வரை கடிதம் மூலமாக ஒரே ஒரு எதிர்ப்பு மட்டுமே வந்துள்ளது. (ஒரு மாதத்துக்கு முன்பு எதிர்ப்பு போராட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது, அப்போது திட்டம் வேண்டாம் என புகார் தர முயன்றவர்களை அலுவலகத்துக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்த உத்தரவிட்டது யார்?) விவசாயிகள் தங்களது கருத்துக்களை தன்னிச்சையாக முடிவு எடுக்கட்டும் என வேண்டுக்கோள் விடுத்தார் ஆட்சியர். (விவசாயிகளுக்கு எதையும் கூறாமல் தன்னிச்சையாக முடிவு எடு என்றால் எப்படி எடுப்பர்). விவசாயிகளின் கருத்துக்கள் சொல்ல உரிமையுண்டு என்றார். (கருந்தாய்வு கூட்டம் போட்டாலே, கைது செய்கிறதே காவல்துறை).

இப்படி வளர்ச்சி என்கிற பெயரிலும், இழப்பீடு பெரிய அளவில் வழங்கப்படும் என ஆசைக்காட்டி விளக்கம் நேரடியாகவும், மறைமுகமாகவும் விவசாயிகளை மூளைச்சலவை செய்தவர் தனது விளக்கத்துக்கு விவசாயிகள் என்ன சொல்கிறார்கள் எனக்கேட்காமல் விட்டுவிட்டார் என புலம்பினார்கள் விவசாய சங்கத்தை சேர்ந்த சிலர்.

சார்ந்த செய்திகள்