CM MK Stalin congratulates the writers selected for the award

ஒவ்வொரு ஆண்டும் சாகித்ய பால புரஸ்கார் விருது மற்றும் சாகித்ய யுவ புராஸ்கார் விருது எனச் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் இலக்கியத்துறையில் தேசிய அளவில் வழங்கப்படும் உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதன்படி தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளிவந்த சிறந்த படைப்புகளுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான (2025) சாகித்ய பால புரஸ்கார் விருதுகள் மற்றும் சாகித்ய யுவ புராஸ்கார் அறிவிக்கப்பட்டுள்ளன.

Advertisment

அந்த வகையில் தமிழ் மொழியில் வெளியான, ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ என்ற நாவலுக்காக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ரூ. 50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட உள்ளது. அதே சமயம் லட்சுமிகர் என்ற எழுத்தாளருக்கு யுவ புரஸ்கார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கூத்தொன்று கூடிற்று’ என்ற சிறுகதைக்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எழுத்தாளர்கள் இருவருக்கும் பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் குழந்தைகளுக்கு வலியுறுத்தும் ‘ஒற்றைச் சிறகு ஓவியா’ நூலுக்காக சாகித்ய அகாதமியின், சாகித்ய பால புரஸ்கார் பெறத் தேர்வாகியிருக்கும் எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணனுக்கு எனது மனம்நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஊஞ்சல், தேன்சிட்டு, கனவு ஆசிரியர் என பள்ளிக்கல்வித்துறையின் முன்னெடுப்புகளிலும் திறம்படப் பங்காற்றி வரும் விஷ்ணுபுரம் சரவணன் இந்த விருதுக்குத் தேர்வாகி இருப்பது கூடுதல் பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

CM MK Stalin congratulates the writers selected for the award

அதேபோல, ஆழமான தம் எழுத்துகளுக்கான அங்கீகாரமாகக் ‘கூத்தொன்று கூடிற்று & பிற கதைகள்” சிறுகதைத் தொகுப்புக்காக யுவபுராஸ்கர் விருது பெறத் தேர்வாகி இருக்கும் லட்சுமிஹருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விருது பெறும் இரு இளம் படைப்பாளிகளும் மென்மேலும் தமிழைச் செழுமைப்படுத்தும் ஆக்கங்களைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என வாசிப்பினைப் பெரும் இயக்கமாக முன்னெடுத்து வரும் திராவிட அரசின் சார்பில் வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment