/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tnsic-art.jpg)
தமிழ்நாடு தகவல் ஆணையம் சென்னையில் உள்ள நந்தனத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆணையம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி 2வது மேல்முறையீடு மீதான மனு மற்றும் புகாரை விசாரிக்கும் அமைப்பாக உள்ளது. அதோடு இந்த ஆணையத்தின் மூலம் பிறப்பிக்கப்பட்ட ஆணையை நிறைவேற்றப்படாதது குறித்து விசாரிக்கும் அமைப்பாகவும் செயல்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் மாநிலத் தலைமை தகவல் ஆணையர் மற்றும் 2 மாநில தகவல் ஆணையர்களைக் கொண்டு தமிழ்நாடு தகவல் ஆணையம் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் மாநில தகவல் ஆணையர்களின் எண்ணிக்கை 2இல் இருந்து 6 ஆக உயர்த்தப்பட்டது. அந்த வகையில் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான எம்.டி. ஷகீல் அக்தர் தலைமை தகவல் ஆணையராகச் செயல்பட்டு வருகிறார். மேலும் தாமரைக்கண்ணன், பிரியாகுமார், திருமலை முத்து மற்றும் செல்வராஜ் ஆகிய 4 பேர் தகவல் ஆணையர்களாகப் பதவி வகித்து வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இரு தகவல் ஆணையர்களுக்கான பதவியிடங்கள் காலியாக இருந்து வந்தன.
இந்நிலையில் மாநில தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள இரண்டு ஆணையர்களுக்கான பதவி இடங்களுக்கு வழக்கறிஞர்கள் வி.பி.ஆர். இளம்பரிதி மற்றும் எம்.நடேசன் (கர்நாடகா வழக்கறிஞர்) ஆகியோரை மாநில தகவல் ஆணையர்களாக நியமித்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார் இதற்கான உத்தரவை மனிதவளத் துறையின் முதன்மை செயலாளர் ஜி. பிரகாஷ் பிறப்பித்துள்ளார். தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வி.பி.ஆர். இளம்பரிதி அரசின் கூடுதல் வழக்கறிஞராக இருந்தவர் என்றும், எம். நடேசன் கர்நாடகா வழக்கறிஞராக இருந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வாரம் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விளாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி இருவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)