Skip to main content

எஸ்.ஐ., ஏட்டை வெட்டிய ரவுடி ரவுடியை மடக்க துப்பாக்கிச்சூடு

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
எஸ்.ஐ., ஏட்டை வெட்டிய ரவுடி
ரவுடியை மடக்க துப்பாக்கிச்சூடு



தூத்துக்குடியின் தென்பாக முத்தையாபுரம் சமீபமாக உள்ள அத்திமரப்பட்டியைச் சேர்ந்த சற்குணம் மகன் முத்துக்குமார் (45). ஆட்டோ டிரைவரான இவர் மீது முத்தையாபுரம், மற்றும் அருகில் உள்ள புதுக்கோட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் இரண்டு கொலை வழக்குகள் பதிவாகி அவைகள் நிலுவலையில் உள்ளன. இது மட்டுமல்லாமல், கொலை முயற்சி, மற்றும் திருட்டு வழக்குகள் போன்றவைகளிலிருந்தாலும் அவைகளில் ஜாமீன் பெற்று வெளியே வந்தவர் தொடர்ந்து கிரிமினல் சம்பவங்களில் ஈடுபட்டும் வந்தார்.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முத்துக்குமாரின் நண்பரான விஜயராஜ் என்பவரைக் கொலை செய்ய முயன்றதாக முத்தையாபுரம் காவல் எல்லைப் போலீசார் கருப்பசாமி, மற்றும் ஆரோக்கியராஜ் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து அவர்களைக் கைது செய்தனர். தகவலறிந்த முத்துக்குமார் நேற்று முன் தினம் இரவு கருப்பசாமியின் வீட்டுக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை அடித்து நொறுக்க, கருப்பசாமி தாய் மரியாவின் புகாரால் முத்துக்குமார் மீது கொலை முயற்சி, சொத்து சேதம் என இரு வழக்குகள் பதியப்பட்டு, அவரை எஸ்.ஐ. ரென்னிஸ் தலைமையிலான போலீசார் அத்திமரப்பட்டிக்குத் தேடிப் போனார்கள். போலீசாரைக் கண்ட முத்துக்குமார் தப்பிக்க முயற்சிக்க, அவரைச் சுற்றி வளைத்தது போலீஸ். ஆனால் போலீசிடம் சரணடையாத முத்துக்குமார் அரிவாளால் எஸ்.ஐ. ரென்னிஸையும் ஏட்டு ராஜன் ஆகியோரை வெட்டிவிட்டுத் தப்பியோடியுள்ளார். 

தங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற போலீசார் அவரை துப்பாக்கியால் சுட, அதில் முத்துக்குமாரின் தொடைப்பகுதியில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். ரவுடி வெட்டியதில் காயமடைந்த போலீசார் சிசிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதே போல் போலீசார் சுட்டதில் காயமடைந்த ரவுடி முத்துக்குமாரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையிலிருக்கிறார்.

சிகிச்சையிலிருந்த போலீசாருக்கு ஆறுதல் கூறிய எஸ்.பி. மகேந்திரன் சொல்லுவது, ரவுடி முத்துக்குமார் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 35க்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன அவரைப் பிடிக்கப் போன எஸ்.ஐ. மற்றும் ஏட்டுவையும் அவர் வெட்டியுள்ளார். தற்காப்பிற்காக எஸ்.ஐ. ரென்னிஸ் சுட்டுள்ளார். முத்துக்குமாருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது அவரிடமிருந்து அரிவாள் கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கும். என்றார்.

நிலப் பிரச்சினை தொடர்பாக அத்திமரப்பட்டியைச் சேர்ந்த ஒருவரை வெட்டிக் கொலை செய்த ரவுடி முத்துக்குமார் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு உடலை பைக்கிலேயே வைத்துச் சுற்றிவிட்டு, பின்னர் உடலை வாழைத்தோட்டத்தில் வைத்து எரித்தவர். அதோடு இதே பிரச்சினையில் மற்றொருவரை கொலை செய்து உடலைக் கிணற்றில் விசிவிட்டுத் தப்பியவர் முத்துக்குமார் இது போன்ற கொடூர பின்னணி கொண்ட அவரது க்ரைம் சார்ட் புருவங்களை உயர வைக்கிறது.
 
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்