மருமகளை அடித்துக் கொன்ற மாமனார் தலைமறைவு
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் ஊராட்சி, துறையூர் என்ற ஊரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது-32), இவர் அங்குள்ள ஒரு தனியார் உரத்தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி அம்பிகா (வயது-25). இவர்களுக்கு ஜோதிமணி (வயது-7), சங்கர் (வயது-6) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஜோதிமணி இரண்டாம் வகுப்பும், சங்கர் முதல் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இவர்களின் வீட்டின் அருகே வேல்முருகனின் தந்தை பெரியசாமி (வயது-55) என்பவர் வசித்து வருகிறார். வீட்டில் தனியாக இருக்கும் மருமகள் அம்பிகாவிடம் மாமனார் பெரியசாமி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து அம்பிகாவின் புகாரை தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் சமாதானம் பேசி, பெரியசாமியை எச்சரித்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மாலை வேல்முருகன் வேலைக்கு சென்றுவிட்ட நேரத்தில், பெரியசாமி மகனின் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தனியாக இருந்த மருமகள் அம்பிகாவிடம் பெரியசாமி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
அப்போதும் மாமனாருக்கும், மருமகளுக்கும் ஏற்பட்ட கைகலப்பில், வேல்முருகன் வீட்டு சமையல் அறையில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து மருமகள் அம்பிகாவின் தலையில் அடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த அம்பிகா துடிதுடித்து இறந்துவிட்டார்.
அக்கம் பக்கம் இருந்தவர்கள் அம்பிகாவின் அலறல் சத்தம் கேட்டு வேல்முருகன் வீட்டுக்கு வந்ததை தொடர்ந்து, பெரியசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அதேநேரத்தில் தகவல் அறிந்து மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினகரன், கருமலைக்கூடல் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பின்னர் அம்பிகாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பெரியசாமியை வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவசுப்பிரமணியம்