
தமிழ்நாடு உட்பட உலகம் முழுக்க கரோனா மற்றும் ஒமிக்ரான் அதிகளவில் பரவிவருகிறது. முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றைக் கடைபிடித்தாலும், கரோனாவின் தீவிர தாக்கத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசும், மாநில அரசுகளும் வலியுறுத்திவருகின்றன. அதேசமயம், மக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவும் அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. மேலும், பொது இடங்களில் கூடுவதற்கும், பொதுப்போக்குவரத்து பயன்படுத்துவதற்கும் கரோனா தடுப்பூசி போட்டிருப்பது அவசியம் எனவும் அரசு வலியுறுத்திவருகிறது. ஒமிக்ரான் பரவல் காரணமாக அரசு பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ளவும் தெரிவித்துள்ளது.
மக்களுக்குத் தடுப்பூசி எளிதில் கிடைக்கும் வகையில், தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு வாரம் சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அந்தவகையில், இந்த வாரத்திற்கான மெகா தடுப்பூசி முகாம் இன்று சனிக்கிழமை தமிழ்நாடு முழுவதும் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் நடக்க உள்ள முகாமில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், இன்று காலை சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சென்னையில் 94% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், இன்று நடக்கும் மெகா தடுப்பூசி முகாம்களில் 15 முதல் 18 வயதுடையவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். கரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஏதாவது சிக்கல் இருந்தால் 104 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.