ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித்தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆன்லைன் மூலம் (இணையதளம்) கலந்தாய்வு புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள தேர்வுக்கூட அரங்கில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் ச.செந்திவேல்முருகன் தலைமையில் நேற்று 19-09-2017(செவ்வாய்கிழமை) நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ச்சி பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 50 பேரில் காலையில் நடைபெற்ற மாவட்டத்திற்குள்ளான கலந்தாய்வில் தமிழ் பாடத்தில் 6பேரும், ஆங்கிலப்பாடத்தில் 5பேரும், கணிதப்பாடத்தில் 11 பேரும், இயற்பியல் பாடத்தில் 5பேரும், வேதியியல் பாடத்தில் ஒருவரும், உயிரியல் பாடத்தில் 6பேரும், விலங்கியல் பாடத்தில் 3பேரும், வரலாறு பாடத்தில் 6பேரும், வணிகவியல் பாடத்தில் 5பேரும், பொருளியல் பாடத்தில் ஒருவரும், ஆக மொத்தம் 49பேர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தேர்வு செய்தனர்.
மதியம் நடைபெற்ற வெளிமாவட்டத்திற்கான கலந்தாய்வில் உடற்கல்வி இயக்குநர்(கிரேடு1) ஒருவர் கலந்துகொண்டு வெளிமாவட்டத்தில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் காலியாக இருந்த பணியிடத்தினை தேர்வு செய்தார். ஆக மொத்தம் 50 பேர் ஆன்லைன் கலந்தாய்வு மூலமாக தங்களுக்குரிய பணியிடங்களை தேர்வு செய்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் புதுக்கோட்டை எம்.தமிழ்செல்வன், அறந்தாங்கி ஆர்.சந்தியா, அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்ட மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு மற்றும் பலர் கலந்துகொண்டனர். அதனைத்தொடர்ந்து ஆன்லைன் கலந்தாய்வு மூலம் பணியிடங்களை தேர்வு செய்த இந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு நாளை 21ந்தேதி(வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிசாமி பணிநியமன ஆணையினை வழங்குகிறார்கள்.
-இரா. பகத்சிங்