
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் சரகம் நெடுங்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தெரசா (80). இவரது மகன் சுபாஷ். இவர் கூலித் தொழிலாளியாக இருந்து வருகிறார். இவர்களுக்கு சொந்தமான அதே பகுதியில் 2 சென்ட் இடம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
2019-20 ஆண்டுகளில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்ட காலகட்டத்தில் தெரசா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அப்போது இடத்தை போலி ஆவணங்கள் மூலம் பட்டா மாற்றம் செய்ததாக அதே கிராமத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற முன்னாள் ராணுவ வீரர் தேவராஜ் என்பவருக்கும் சுபாஷ் குடும்பத்தினருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து வழக்கு திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்திய நிலையில் ஆத்திரமடைந்த முன்னாள் ராணுவ வீரர் தேவராஜ் என்னையே விசாரணைக்கு அழைத்து விட்டாயா என்று ஆத்திரத்தில் இன்று காலையில் இருசக்கர வாகனத்தில் சுபாஷ் வெளியில் வீட்டில் இருந்து கிளம்பிய போது இரும்பு ராடு கொண்டு கடுமையாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.
சுபாஷ் சொந்தமான இடத்தில் இருந்த பொருட்களை தூக்கி சாலையில் எரிந்து கையில் கத்தியை வைத்துக் கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டி அராஜகத்தில் ஈடுபட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்த சுபாஷ் குடும்பத்தினர், இதுவரை போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் தெரசா குடும்பத்தினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.