காட்டுமன்னார்கோவில் அருகே
4 வயது சிறுமி மர்ம காய்ச்சலால் இறப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே மேலபழஞ்சநல்லூர் கிராமம், மேலத்தெருவில் வசித்து வருபவர் செந்தமிழ்செல்வன் (34). விவசாய கூலியான இவரது மனைவி வேம்பு (27) இவர்களுக்கு சுபிக்ஷா (4), சண்முகி (2) ஆகிய இரு பெண்குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூத்தமகள் சுபிக்ஷாவிற்கு திடீரென தலைவலி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து மீன்சுருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளித்து வந்துள்ளனர். அங்கே 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சையளித்தும் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாததால் மீன்சுருட்டி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது அங்கும் 10 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டும் எந்தவிதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த சுபிக்ஷாவின் தந்தை செந்தமிழ்செல்வன் சுபிக்ஷாவை தஞ்சாவூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கும் 10 நாட்கள் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை உங்கள் மகள் இறந்துவிட்டார் என தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்ச்செல்வன் செய்வதறியாது இறந்த குழந்தை சுபிக்ஷாவின் உடலை பெற்றுக்கொண்டார். இதுபற்றி இறந்த சிறுமியின் உறவினர்கள் கூறும்போது. மீன்சுருட்டி மற்றும் ஜெயங்கொண்டம் அரசுமருத்துவமனை மருத்துவர்களுக்கே இது எந்தவிதமான காய்ச்சல் என தெரியவில்லை. அதேபோல் மருத்துவர்கள் சிறுமிக்கு சரியான முறையில் சிகிச்சையும் அளிக்கவில்லை, அதன் காரணமாகத்தான் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றோம். ஆனால் அங்கு என்ன நடந்து என்றே தெரியவில்லை என்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என யாரையும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார். மருத்துவர்களின் அலட்சியத்தால் இதுபோல் வேறொரு மரணம் நிகழும் முன்பாக தமிழ அரசும், சுகாதார துறையும் விரைந்து நடவடிக்கை எடுத்து அரசு மருத்துவமனைகளின் தரத்தை மேம்படுத்தவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
- காளிதாஸ்