Skip to main content

"பொள்ளாச்சி சம்பவம் ஒண்ணு போதாதா..." - இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதிலடி 

Published on 11/01/2023 | Edited on 11/01/2023

 

cm stalin response  edappadi pazhanisami allegation law and order issue

 

2023ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர்,  ஆளுநர் ரவி உரையுடன் 9ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் படிக்கும்போது, தமிழ்நாடு அரசின் உரையில் குறிப்பிடப்பட்டிருந்த திராவிட மாடல், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்ட வரிகளைப் புறக்கணித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரின் பேச்சுகள் அவைக் குறிப்பில் இடம்பெறக்கூடாது எனத் தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனால் கோபமடைந்த ஆளுநர், சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

இந்நிலையில் மூன்றாவது நாளான இன்று கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில், பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, "தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. நாள்தோறும் கொலை, கொள்ளை, வழிப்பறி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சாலிகிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெண் காவலருக்கு திமுகவினர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்” என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 

 

இதனைத் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் 13 மரணங்கள், கூடங்குளம் மக்கள்  போராட்டம் நடத்தியது, ஐஜியின் கைத்துப்பாக்கி காணாமல் போனது, பொள்ளாச்சி சம்பவம், வன்னியர் சங்க மாநாட்டில் 100 வாகனங்கள் எரிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பொதுமக்கள் மீது தடியடி நடத்தி அவர்களின் வாகனங்களை காவல்துறையே தீயிட்டுக் கொளுத்தியது, சாத்தான்குளத்தில் தந்தை மற்றும் மகனை லாக்கப்பில் வைத்து அடித்துக் கொலை செய்த விவகாரம் இதுபோன்ற வன்முறைகள் எல்லாம் எங்கள் ஆட்சியில் இல்லை. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று சொன்ன உங்கள் ஆட்சியில்தான்.  யாராக இருந்தாலும், எந்தக் கட்சி என்று பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஆட்சிதான் இந்த ஆட்சி" எனப் பதிலளித்தார். இதில் பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் ஒன்று போதாதா உங்கள் ஆட்சியில் சட்ட ஒழுங்கு எப்படியிருந்தது என்று கூற" எனக் குறிப்பிட்டிருந்தார்.  

 

 

சார்ந்த செய்திகள்