/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/tvk-vijay-mic-art-hsc-1_0.jpg)
ஒன்றிய அரசு நடத்தும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பானது உண்மையான சமூக நீதியை நிலைநாட்டுவதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு வகுப்புக்குமான விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் அவர்களின் சமூக நிலை குறித்த சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வினை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அனைத்துச் சமூக மக்களின் சமூக நீதிக்கான உரிமை முழக்கம். இந்தக் கோரிக்கையானது, இந்திய ஒன்றியமெங்கும் வலுவடைந்த காரணத்தால் ஒன்றிய பா.ஜ.க. அரசு இறங்கி வந்து, நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தது.
இந்தக் கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 2027 மார்ச் 1ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைப் பிரகடன முதல் மாநில மாநாட்டில் சமூக நீதிக்கான எங்களுடைய முழுமுதல் கோரிக்கையாக இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. இதை ஒன்றிய அரசு பல்வேறு அரசியல் காரணங்களுக்காக வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தச் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தும் ஒன்றிய அரசு, மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்த்து, வெறும் கண்துடைப்பு சாதிவாரித் தலைக்கட்டுக் கணக்கெடுப்பாக நடத்தக் கூடாது. அனைத்து வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு மற்றும் உள் ஒதுக்கீடு முறையாகக் கிடைக்கப் பெறும் வகையில் நடத்த வேண்டும். இதற்கென்று அனைத்துச் சமூகத்தின் பிரதிநிதிகளும் உள்ளடங்கிய ஒரு பிரத்தியேக ஆணையம் அல்லது குழு அமைக்க வேண்டும்.
உரிய தரவுகள் முறையாகவும் முழுமையாகவும் இருக்கும் வகையில் குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயம் செய்து இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் எங்கள் பிரதான கோரிக்கையான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். குறிப்பாக, மக்களவைத் தொகுதிகளுக்கான மறுசீரமைப்பை நோக்கமாகக் கொண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படக் கூடாது. மாறாக அனைத்துச் சமூகத்திற்கும் உரிய விகிதாசார அடிப்படையில் அவர்களின் பிரதிநிதித்துவத்தை முன்னிலைப்படுத்துவதாக மட்டுமே இருக்க வேண்டும். இதுவே முழு அளவிலான சமூக நீதி ஆகும். இந்தக் கணக்கெடுப்பின் வாயிலாக உண்மையான சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். மக்கள் தொகைக் கணக்கெடுப்போடு சேர்ந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு (Caste Census) நடத்தப்படும் என்று ஒன்றிய அரசு அறிவித்திருந்தாலும், மாநில அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை (Caste Survey) நடத்த வேண்டும்.
அண்டை மாநில அரசுகள் சில தங்களுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி, தன்னிச்சையாக சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு நடத்தியுள்ளன. இந்த ஆய்வு மீண்டும் நடத்தப்படும் என்று சில மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்தப் புதிய சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வில் (Caste Survey). மக்களின் சமூக, கல்வி, பொருளாதார நிலை உள்ளிட்டவை குறித்தத் தரவுகள் முழுமையாகச் சேகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன. இதுதான் உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்றும் அம்மாநில அரசுகள் தெரிவித்துள்ளன. மக்கள் மீது உண்மையான அக்கறை கொண்டுள்ள அரசு செய்ய வேண்டியது இதைத்தான். எனவே, தமிழ்நாடு அரசும் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வு (Caste Survey) நடத்த வேண்டும். இட ஒதுக்கீடு தொடர்பான பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் கேட்டுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மற்றும் வகுப்புகளின் சமூக, வாழ்வாதார, பொருளாதார, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும், எந்தெந்த நிலைகளில் தற்போது பின்தங்கி உள்ளனர் என்பதற்கான சரியான தரவுகள் மற்றும் தற்போதைய சமூக நிலை உள்ளிட்டவற்றின் விவரங்களை அதில் சேகரிக்க வேண்டும்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anna-arivalayaam-new-art_9.jpg)
அந்த ஆய்வானது, அனைத்துச் சமூகத்திற்குமான பிரதிநிதித்துவத்தையும் சட்டப்படி செல்லத்தக்க, உகந்த உள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையிலான தரவுகளை முழுமையாக உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதைச் செய்யாமல், மாநில அரசுகள் சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த வேண்டியதில்லை என்கிற ஒன்றிய அரசின் அறிவிப்பைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுக அரசு, பா.ஜ.க.வின் முதுகிற்குப் பின்னால் ஒளிந்துகொண்டு சமூக அநீதிக்குத் துணை போகக் கூடாது. அவ்வாறு ஒளிந்துகொண்டு மாநில அரசு சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வை நடத்தாமல் விட்டுவிட்டால், தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு ஆய்வுக்கான கோரிக்கை இன்னும் வலுவடையும் என்பதை மறந்துவிட வேண்டாம். அத்துடன் எங்கள் கொள்கைத் தலைவர் பெரியார் அவர்களின் கொள்கை முழக்கமான விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை, திமுக அரசு, பிளவுவாத பாஜக அரசுடன் இணைந்து அமல்படுத்தத் தவறினால், இந்த மக்கள் விரோத அரசுக்கு, வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)