10 people sentenced to life imprisonment for Kuthenkuly case

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே கூத்தங்குழி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த கிரிக்கெட் விளையாட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட விரோதத்தில் கொலை சம்பவம் நிகழ்ந்தது. இது தொடர்பான வழக்கில் இன்று (17.06.2025) திருநெல்வேலி 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பினை நீதிபதி ராபின்சன் ஜார்ஜ் வழங்கினார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட மொத்தம் 19 பேரில், 3 பேர் வழக்கின் விசாரணையின் போதே மரணம் அடைந்தனர். மீதமுள்ள 16 பேர் மீது விசாரணை நடைபெற்றது. இதில் 10 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. அதன்படி 10 பேருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அதாவது காந்தி என்கிற ராஜேந்திரன் என்கிற சிலுவை அந்தோணி (வயது 68), கணேசன் என்கிற கணேஷ் (வயது 40), சிலம்பரசன் என்கிற சிம்பு (வயது 39), ஜான் பால் என்கிற ஜேசுவடியான் பால் (வயது 42), வினோத் என்கிற வினோ (வயது 42), சஞ்சய் என்கிற அருள் சகாயராஜ் (வயது 44), அன்டன் (வயது 41), ஜேம்ஸ் (வயது 39), மைக்கேல் (வயது 43) மற்றும் அந்தோணி மைக்கேல் (வயது 39) ஆகியோருக்கு ஆயுள் தண்டை விதிக்கப்பட்டது. அதே சமயம் 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் திறமையாக புலனாய்வு செய்து, ஆஜர்படுத்தி. நீதிமன்ற விசாரணை மூலம் சாட்சிகளை குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்த வள்ளியூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேஷ். இவ்வழக்கினை புலனாய்வு செய்த காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் (தற்போது டி.எஸ்.பி.யாக பதவி வகித்து வருகிறார்) மற்றும் கூடங்குளம் காவல் நிலைய காவல் அதிகாரிகள். ஆளிநர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் பாராட்டினார்.

Advertisment

2025ஆம் ஆண்டு கடந்த ஆறு மாதங்களில் மட்டும், திருநெல்வேலி மாவட்டத்தில் 13 கொலை வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. இதில் ஒரு நபருக்கு மரண தண்டனையும், 51 நபர்களுக்கு ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தண்டனை பெற்றவர்களில், 14 பேர் சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.