Skip to main content

“ஆணவம் கொண்ட இந்தியா கூட்டணி எதையும் சாதிக்காது” - மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் விமர்சனம்

Published on 13/01/2024 | Edited on 13/01/2024
 Union Minister Anurag Thakur says An arrogant India alliance will not achieve anything

2024ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் ஜனதா தளம், திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகின்றனர். அந்த வகையில், பீகார் மாநிலம் பாட்னாவில் இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இதையடுத்து, பெங்களூர், மும்பை என அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்தியா கூட்டணியின் 4வது ஆலோசனைக் கூட்டம் கடந்த டிசம்பர் 19 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது.

இதே வேளையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர், எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நிதிஷ்குமாரை அறிவிக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, நான்கு கட்டங்களாக இந்தியா கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்த நிலையில், ஆம் ஆத்மி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுடன் காங்கிரஸின் 5 உறுப்பினர்களைக் கொண்ட தேசிய கூட்டணிக் குழு தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக்கு என்ன கொள்கை இருக்கிறது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், “பல்வேறு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்துள்ளன. இந்தியா கூட்டணியின் கொள்கைகள் என்ன?. அவர்களுக்குள் எந்தவித ஒருங்கிணைப்பும் இல்லை. எந்த ஒரு விவகாரத்திலும் அவர்கள் உடன்பட மாட்டார்கள். ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதற்கு கூட தயாராக இல்லாத தலைவர்களின் தன்முனைப்பு மற்றும் ஆணவத்தால் இந்த கூட்டணி இயங்கி வருகிறது. இந்த ஆணவம் கொண்ட கூட்டணி எதையும் சாதிக்காது. அவர்களுக்கென்று தலைவரும் இல்லை, கொள்கையும் இல்லை. அவர்கள் கூடிய முதல் நாளில் இருந்து அவர்களின் முரண்கள் அப்பட்டமாக தெரிகின்றன” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்