இந்தியாவிலேயே அதிக துப்பாக்கி உரிமங்களைக் கொண்ட மாநிலங்களில் உபி. முதலிடம்!
இந்தியாவிலேயே அதிக அளவிலான துப்பாக்கி உரிமங்களைக் கொண்ட மாநிலம் உத்தரப்பிரதேசம் என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் துப்பாக்கிகளை உரிமங்களுடன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையை மாநிலங்கள் வாரியாக மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. இதில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மட்டும் 12.77 லட்சம் உரிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பட்டியலில் உத்தரப்பிரதேசம் மாநிலம் முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக 3.69 லட்ச உரிமங்களுடன் ஜம்மு காஷ்மீர் இரண்டாவது இடத்தில் உள்ளது. 3,59,349 உரிமங்களுடன் பஞ்சாப் மாநிலம் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது. இதில் பெரும்பாலானவை 1980, 1990 காலகட்டங்களில் பஞ்சாபில் தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்திருந்த சமயத்தில் வாங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 31, 2016ஆம் ஆண்டு வரை நாடு முழுவதும் 33,69,444 துப்பாக்கி உரிமங்கள் இருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தமிழத்தில் 22,532 உரிமங்களும், நாட்டிலேயே மிகக்குறைவாக டையூ டாமன் மற்றும் நாகர் ஹவேலியில் தலா 125 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ச.ப.மதிவாணன்