Skip to main content

டெல்லியை உலுக்கிய இரட்டை கொலை வழக்கில் பெற்றோர் விடுதலை!

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
டெல்லியை உலுக்கிய இரட்டை கொலை வழக்கில்
பெற்றோர் விடுதலை!

டெல்லியைச் சேர்ந்த ஆருஷி என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவரது பெற்றோரை விடுதலை செய்து, அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆருஷியின் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனையை ரத்துசெய்து விடுவித்துள்ளது.

டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டு இளம் பெண் ஆருஷி, அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது வீட்டு வேலைக்காரரான ஹேம்ராஜும் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இவர்கள் இருவரது கொலைக்கும் ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வார், தாய் நூபுர் தல்வார் ஆகியோரே காரணம் என குற்றம்சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

ஆருஷிக்கும் ஹேம்ராஜுக்கும் இடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து,   ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து கொலை செய்து விட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

நாட்டையே உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணையை சி.பி.ஐ.நடத்தியது. இதில் கொலையை திட்டமிட்டு செய்ததாக ராஜேஷ் தல்வார், தாய் நுபுர் தல்வார் ஆகியோருக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2013-ம் ஆண்டு, இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இதனையடுத்து இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டடனர்.

இந்த தண்டனையை எதிர்த்து ஆருஷியின் பெற்றோர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆருஷியின் பெற்றோரை விடுவித்துள்ளது. ஆருஷியின் பெற்றோர் மீது சிபிஐ கூறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் தண்டிக்க கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சார்ந்த செய்திகள்