
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா கடந்த 7ஆம் தேதி நள்ளிரவு ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் ராணுவம் எல்லையை மீறி தாக்குதல் நடத்தியது.
கடந்த 3 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் அனைத்துக்கும் இந்தியா பதிலளித்து வந்தது. இதனையடுத்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், அமெரிக்காவின் தலையீட்டு காரணமாக இந்த தாக்குதல்கள் நிறுத்தப்பட்டது.
பயங்கரவாதிகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை லெப்டினண்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தனர். பஹல்காம் தாக்குதலில் தங்கள் கணவர்களை இழந்த பெண்களின் கண்ணீரைத் துடைக்கும் விதமாக நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல் குறித்து பெண் அதிகாரிகளை கொண்டே விவரங்களை வெளியிட வைத்திருந்தது உலகம் முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்தது. இதனை பலரும் பாராட்டி இருந்தனர்.

ஆனால், கர்னல் சோபியா குரேஷியை இழிவுப்படுத்தும் விதமாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியிருப்பது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. அரசு விழாவில் கலந்து கொண்ட குன்வார் விஜய் ஷா, “கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் எங்கள் மகள்களை கைம்பெண் ஆக்கியவர்களுக்கு, ஒரு பாடம் கற்பிக்க நாங்கள் அவர்களின் சொந்த சகோதரியை அனுப்பினோம். சுற்றுலாப் பயணிகளை மதத்தைக் கேட்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். எனவே பிரதமர் மோடி, பயங்கரவாதிகளின் சமூகத்தைச் சேர்ந்த ஒரு சகோதரியை அனுப்பினார். அதனால், நீங்கள் எங்கள் சகோதரிகளை கைம்பெண்கள் ஆக்கினால், உங்கள் சகோதரி வந்து உங்கள் ஆடைகளைக் களைவாள்” என்று சர்ச்சையாகப் பேசினார். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த கர்னல் சோபியா குரேஷியை, பயங்கரவாதிகளின் சகோதரி என சித்திரிக்கும் வகையில் பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா பேசியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
கடும் எதிர்ப்பை அடுத்து, தான் பேசிய பேச்சுக்கு மன்னிப்பு கேட்பதாக பா.ஜ.க அமைச்சர் குன்வார் விஜய் ஷா தெரிவித்தார். தான் தவறான முறையில் பேசவில்லை என்றும், கர்னல் சோபியா குரேஷி தனது சகோதரிக்கு மேலானவர் என்றும், தான் பேசிய பேச்சால் யாராவது காயப்பட்டிருந்தால் இதயத்தில் அடிப்பகுதியில் இருந்து மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம், அமைச்சர் குன்வார் விஜய் ஷார் மீது 4 மணி நேரத்திற்குள் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என போலீஸுக்கு உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில், விஜய் ஷா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, தனக்கு எதிராக போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், மத்திய பிரதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரியும் பா.ஜ.க அமைச்சர் விஜய் ஷா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

அந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை இன்று (15-05-25) உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி பி.ஆர் கவாய் அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகூறியதாவது, “அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவர் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உயர் பொறுப்பில் உள்ள அமைச்சர் ஒருவர் இப்படி பேசுவது சரியா? ஒரு அமைச்சர் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது பொருத்தமானதா? அமைச்சருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆரில் சர்ச்சைக்குரிய கருத்தை முழுமையாக குறிப்பிடவில்லை. அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் எஃப்.ஐ.ஆரில் இருக்க வேண்டும்” என்று கூறினார். இதையடுத்து, அமைச்சர் மன்னிப்பு கேட்டதாகவும், அவரின் பேச்சுகள் ஊடகங்களால் திரித்து வெளியிடப்பட்டதாகவும் விஜய் ஷா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். இதனை கேட்ட தலைமை நீதிபதி, “நாடு ஒரு முக்கியமான சூழ்நிலையைக் கடந்து செல்லும் போது, முக்கிய பொறுப்பில் உள்ள ஒருவர், உச்சரிக்கும் ஒவ்வொரு வாக்கியமும் கேட்கப்படுகிறது. நீங்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியும், 24 மணி நேரத்தில் எதுவும் நடக்காது” என்று கூறி அமைச்சர் விஜய் ஷா மீதான எஃப்.ஐ.ஆர் மீது தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.