Allahabad Court opinion Muslim men can have multiple wives if everyone is treated equally

முஸ்லிம் ஆண்கள் அனைவரையும் சமமாக நடத்தினால் பல மனைவிகளை வைத்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் மொராதாபாத்தைச் சேர்ந்தவர் ஃபுர்கான். இவர் மீது கடந்த 2020ஆம் ஆண்டு ஒரு பெண் மொராதாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில், ஃபுர்கான் ஏற்கெனவே வேறொரு பெண்ணை மணந்ததைத் தெரிவிக்காமல் தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்தின் போது தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில், காவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டு ஃபுர்கான் மற்றும் இரண்டு பேர் உள்பட மூன்று பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

Advertisment

இந்த சூழ்நிலையில், தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை விசாரணை மற்றும் சம்மன் உத்தரவை ரத்து செய்யக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஃபுர்கான் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி அருண் குமார் சிங் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஃபுர்கான் தரப்பு வழக்கறிஞர், ‘ஃபுர்கானுடன் உறவு கொண்ட பிறகு தான் அவரை அந்த பெண் திருமணம் செய்துள்ளார். ஏற்கனவே வேறொருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் ஒருவரை திருமணம் செய்வது என்பது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 494-ன் கீழ் குற்றத்தை ஈர்க்கும் வகையில் இரண்டாவது திருமணம் செல்லாது’ என வாதிட்டார்.

வாதங்களை கேட்ட நீதிபதி அருண் குமார் சிங், ‘ஒரு முஸ்லிம் ஆண், நான்கு முறை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுவதால், அந்த நபர் எந்த குற்றமும் செய்யவில்லை. குர்ஆன் பலதார மணத்தை அனுமதிப்பதற்குப் பின்னால் ஒரு வரலாற்றுக் காரணம் இருக்கிறது. ஆனால், சுயநல காரணங்களுக்காக ஆண்களால் அது தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.ஒரு முஸ்லிம் ஆண் தனது அனைத்து மனைவிகளையும் சமமாக நடத்தும் வரை பல முறை திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு. திருமணம் மற்றும் விவாகரத்து தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளும் 1937 ஷரியத் சட்டத்தின்படி தீர்மானிக்கப்பட வேண்டும். ஃபுர்கானின் இரண்டு மனைவிகளும் முஸ்லிம்கள் என்பதால் அவரது இரண்டாவது திருமணம் செல்லுபடியாகும்’ இந்த வழக்கை மே 26ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.