Skip to main content

மாதவிடாய் குறித்த ஸ்மிருதி இரானி கருத்தால் சர்ச்சை! 

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
Minister Smriti Irani's statement on menstruation paid leave

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் செய்யப்பட்டது, நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை புதுச்சேரி மற்றும் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு நீட்டிப்பதற்கான மசோதாக்கள் மக்களவையில் கடந்த 12ம் தேதி நிறைவேற்றப்பட்டது, குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்றும் முடிவு வாபஸ் பெறப்பட்டது என பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.  

அதேபோல், நாடாளுமன்ற தாக்குதல் நினைவு தினமான நேற்று (டிச. 13ம் தேதி) மீண்டும் நாடாளுமன்ற மக்களவையினுள் பாதுகாப்பு அத்துமீறல் நடந்தது. இது தற்போது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நேற்று மாநிலங்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ள பதில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்று (டிச. 13ம் தேதி) நாடாளுமன்ற மாநிலங்களவையில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் மனோஜ் குமார் ஜா, நாட்டில் மாதவிடாய் சுகாதாரக் கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கொடுத்துள்ள பதில் பெண்கள் மத்தியில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

மாநிலங்களவையில் எம்.பி. மனோஜ் குமார் ஜா எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “மாதவிடாய் மற்றும் மாதவிடாய் சுழற்சி ஒரு குறைபாடு (உடல் ஊனம்) இல்லை. இது இயற்கையாக பெண்கள் வாழ்வில் நடக்கும் நிகழ்வு. மாதவிடாய் வராத ஒருவர் மாதவிடாய் குறித்து குறிப்பிட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு சம வாய்ப்புகள் மறுக்கப்படும் பிரச்சினைகளை நாம் முன்வைக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

இதேபோல், கடந்த வாரம் மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, “அனைத்து பணியிடங்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்குவதற்கான எந்த முன்மொழிவும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை” என்று தெரிவித்திருந்தார். அமைச்சர் ஸ்மிருதி இரானியின் இந்தக் கருத்துகள் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. 

சார்ந்த செய்திகள்