சேலத்தில் தி.மு.க. நிர்வாகிகளைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், "கட்சிக்கு விரோதமாக செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி, மேட்டூர் அணையைத் திறந்து வைத்தார். இதையொட்டி, முதல்நாள் இரவே சேலம் வந்து சேர்ந்த முதல்வருக்கு, மேட்டூர் அருகே பெரும்பள்ளத்தில் தி.மு.க.வினர் பிரமாண்ட வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து 11 கி.மீ. தூரம் "ரோடு ஷோ' சென்ற முதல்வர், மக்களிடம் கோரிக்கை மனுக்களை உற்சாகத்தோடு பெற்றார்.
அன்றிரவு, தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். மருமகன் சபரீசன் மேற்பார்வையில் இயங்கும் "பென்' டீம், உளவுப்பிரிவு அறிக்கை என முழுமை யான டேட்டாபேஸூடன் கூட்டத்திற்கு வந்திருந்தார் முதல்வர். அதனால் யாருக்கு "குட்டு', யாருக்கு "ஷொட்டு' விழும் என கட்சியினர் மத்தியில் பலத்த எதிர் பார்ப்பு நிலவியது.
"அமைச்சர் ராஜேந் திரன், டி.எம்.செல்வ கணபதி, எஸ்.ஆர்.சிவ லிங்கம் ஆகிய மூன்று மா.செ.,க்களையும், மறைந்த வீரபாண்டியா ரின் மறு உருவமாகப் பார்க்கிறேன். ஒரு அமைச்சர், இரண்டு எம்.பி.,க்கள் என சேலம் மாவட்டத்திற்கு கிடைத்த இவ்வளவு பெரிய வாய்ப்பு வேறு எந்த மாவட் டத்திற்கும் கிடைத்ததில்லை'' என்றார் முதல்வர். மா.செ.க்களுடன் வீரபாண்டியாரை ஒப்பிட்டுப் பேசியதை யாரும் ரசிக்காததால் வழக்கமாக வீரபாண்டி யார் பெயருக்கு எழக் கூடிய கரவொலி நிர்வாகிகள் மத்தியில் மிஸ்ஸிங்.
"சேலம் மேற்கு மாவட்டத்தில் மேட்டூர், இடங்கணசாலை ஒன்றியங்கள் தவிர மற்ற பகுதிகளில் கட்சி வீக்காக இருக்கிறது. மத்திய மாவட்டத்தில் அஸ்தம்பட்டி, கன்னங்குறிச்சி பகுதிகள் நன்றாக செயல்படுகின்றன. கிழக்கு மாவட்டத்தில் நாலைந்து ஒன்றியங்களில் கட்சி நிர்வாகிகள் நன்றாக செயல்படுகின்றனர். ஒவ்வொரு நிர்வாகியும் எப்படி உழைக்கிறார்கள் என்ற முழு விவரமும் என்னிடம் இருக்கிறது. தப்பு செய்தவர்கள் திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பளிக் கிறேன். யார் பெயரையும் குறிப்பிட்டு புண்படுத்த விரும்பவில்லை. கட்சிக்கு விரோதமாக செயல்பட் டால் கடும் நடவடிக்கை எடுப்பேன்'' என எச்சரித் தார் மு.க.ஸ்டாலின். நிகழ்ச்சியில் நிர்வாகிகளின் கருத்தைக் கேட்காததால் அதிருப்தியடைந்தனர்.
இது ஒருபுறமிருக்க, மேட்டூர், எடப்பாடி தொகுதிகளைச் சேர்ந்த அதிருப்தி கோஷ்டி யினரோடு ஜூன் 12ம் தேதி மாலையில் பேசினார் சேலம் மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலு. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திர னும் உடனிருந்தார். மேட்டூர் மாஜி எம்.எல்.ஏ. கோபால், நங்கவள்ளி ரவிச்சந்திரன், அப்துல்சலாம், கொளத்தூர் தவசி ராஜா, கொடியரசி என்கிற கீதா, ரங்கசாமி, ஜலகண்டாபுரம் பேரூராட்சித் தலைவர் காசி, கொங்கணாபுரம் சுப்ரமணி, கருணாநிதி மற்றும் அருணாச்சலம், சரவணன், எடப்பாடி செந்தில் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
"யார் மீதும் நடவடிக்கை எடுப்பதற்காக நான் இங்கு வரவில்லை. எனக்கு சீட் கொடுத்தால்தான் தி.மு.க. ஜெயிக்கும் என்று நினைப்பவர்கள் தி.மு.க.வுக்கு புற்றுநோயைப் போன்றவர்கள். 2016, 2021 தேர்தல்களில் சேலம் மாவட்டத்தில் தி.மு.க. ஒரேயொரு இடத்தில்தான் வென்றது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. மேட்டூர், எடப்பாடியில் ஜெயிக்காவிட்டால் ஆட்சியைப் பிடிக்காமல் போய்விடுவோமா? உங்கள் மா.செ. டி.எம்.செல்வ கணபதியிடம் பேச முடியாவிட்டால், அமைச்சர் ராஜேந்திரனிடம் கேளுங்கள்'' என்று எ.வ.வேலு கறாராகப் பேசிவிட்டுச் சென்றார்.
அமைச்சர் எ.வ.வேலுவைச் சந்தித்த மூத்த நிர்வாகிகளிடம் பேசினோம். "சேலம் மேற்கு மா.செ. டி.எம்.செல்வகணபதி, வீரபாண்டியாரின் ஆதரவாளர்களை ஓரங்கட்டிவிட்டார். கடந்த தேர்தலில் மேட்டூரில் போட்டியிட்ட சீனிவாசபெருமாள், சங்ககிரி ராஜேஷ் ஆகியோரை கட்டம் கட்ட மேலிடத்திற்கு பரிந்துரைத்தார். அவர்களை டம்மியாக்குவதற்காக சங்ககிரி, மேச்சேரி ஆகிய ஒன்றியங்களை பிரித்து தனது ஆதரவாளர்களை ஒ.செ.க்களாக நியமித்துவிட்டார். கொங்கணாபுரம், எடப்பாடி, மகுடஞ்சாவடி ஒன்றியங்களிலும் இதே நிலைதான்.
நங்கவள்ளி ஒ.செ. அர்த்தநாரீஸ்வரன், மேட்டூர் ந.செ. காசி விஸ்வநாதன், மேச்சேரி ந.செ. சரவணன், வீரக்கல் பே.செ. முருகன் ஆகியோரை பொறுப்பிலிருந்து நீக்கும்படி பென் டீம் பரிந்துரைத்தது குறித்து அமைச்சர் எங்களிடம் பேசவேயில்லை. அ.தி.மு.க.விலிருந்து வந்தவர்க ளெல்லாம் உடனடியாக அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ., ஆகிவிடுகிறார்கள்.
கட்சிக்காக 40 ஆண்டுகளாக உழைத்த நிர்வாகிகளைப் பார்த்து புற்றுநோய் என்று குத்தலாகப் பேசுகிறார். சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பாளராக துணை முதல்வர் உதயநிதியை நியமிக்கவேண்டுமென்று முதல்வரிடம் விரைவில் முறையிடுவோம்'' என்று குமுறினார்கள்.
கடந்த ஏப்ரல் 26-29 நாளிட்ட நக்கீரன் இதழில், "அ.தி.மு.க. கோட்டையில் தி.மு.க. கொடி பறக்குமா?' என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த கட்டுரையை சுட்டிக்காட்டிய மூத்த நிர்வாகிகள், "வீர பாண்டியாரின் ஆதரவாளர்களைப் புறக்கணித்தால் சேலம் மாவட்டத்தில் வரும் தேர்தலிலும் தி.மு.க.வுக்கு பின்னடைவுதான் ஏற்படும்'' என்றனர்.
இது தொடர்பாக விளக்கம்பெற அமைச்சர் எ.வ.வேலுவின் உதவியாளரை தொடர்பு கொண் டோம். "அமைச்சர், வள்ளுவர் கோட்டம்வரை சென்றிருக்கிறார். அவர் வந்தபிறகு அழைக்கிறோம்'' என்றார்.
சேலம் மாவட்டத்தில் மா.செ.க்கள் மூவருக்கும் எதிராகப் புயலைக் கிளப்புகிறது அதிருப்தி கோஷ்டி.