/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/draun_0.jpg)
இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரான திரெளபதி முர்முவின் 67 வது பிறந்தநாள் விழா இன்று (20-06-25) கொண்டாடப்பட்டு வருகிறது. இவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இன்று பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். இதற்கிடையில், மூன்று நாள் பயணமாக ஜனாதிபதி திரெளபதி முர்மு உத்தரகாண்டிற்கு இன்று சென்றுள்ளார். டேராடூனுக்கு வந்த ஜனாதிபதி முர்மு, ஜனாதிபதி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுவதோடு, ஜனாதிபதி நிகேதனின் பல்லுயிர் பெருக்கம் குறித்த புத்தகத்தையும் வெளியிட உள்ளார்.
பயணத்தின் ஒரு பகுதியாக டேராடூனில் உள்ள பார்வை குறைபாடுகள் உள்ளவர்களின் அதிகாரமளிப்பு நிறுவனத்திற்கு (NIEPVD) அவர் சென்றார்; அப்போது ஜனாதிபதி முர்முவின் 67வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் ஒரு சிறப்பு பாடலை பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் அவர் முன்பு பாடினர். இதனை கேட்ட ஜனாதிபதி முர்மு மிகவும் நெகிழ்ச்சியடைந்தார். மாணவர்களின் இதயப்பூர்வமான பாடலைக் கேட்டுக்கொண்டிருந்த திரெளபதி முர்மு, தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆனந்த கண்ணீர் விட்டார்.
அதனை தொடர்ந்து பேசிய திரெளபதி முர்மு, “என்னால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அவர்கள் இதயத்தில் இருந்து பாடினார்கள். அதை மிகவும் அழகாக செய்தார்கள்” என்று கூறி மாணவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த நெகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)