/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modiamn.jpg)
பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர்.
இந்த நிலையில், பீகாரில் ரூ.10,000 மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று (20-06-25) தொடங்கி வைத்தார். அதன் பின்னர் சிவான் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள், பாபாசாகேப் அம்பேத்கரை தங்களது காலில் வைத்திருக்கிறார்கள். ஆனால் நான் அவரை என் இதயத்தில் வைத்திருக்கிறேன். அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்து ராஷ்டிரிய ஜனதா தளம் என்ன மாதிரியான நடவடிக்கையை மேற்கொண்டது என்பதை இந்த முழு நாடும் பார்த்திருக்கிறது. அம்பேத்கரின் உருவப்படத்தை அவமதித்ததற்காக அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை பார்த்தேன்.
ஆனால், பட்டியலினத்தவர்கள் மீதும் பிற்படுத்தப்பட்டோர் மீது அவர்களுக்கு மரியாதை இல்லாததால் அவர்கள் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டார்கள் என்பது எனக்கு தெரியும்.அம்பேத்கரை அவமதிப்பதன் மூலம் அவர்கள் அவரை விட பெரியவர்கள் என்று காட்ட விரும்புகிறார்கள். ராஷ்டிரிய ஜனதா தளம் அம்பேத்கரை அவமதித்துவிட்டது. பீகார் மக்கள் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். நாங்கள் அனைவருக்குமான வளர்ச்சி வேண்டும் என்று கூறுகிறோம், ஆனால் ராஷ்டிரிய ஜனதா தளமும் காங்கிரஸும் குடும்பத்துக்கான வளர்ச்சியை மட்டும் பார்க்கிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் அந்தந்த குடும்பங்களின் நலனுக்காக சேவை செய்தால், நாடு மற்றும் பீகாரில் உள்ள கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும்.
அம்பேத்கர் இது போன்ற அரசியலுக்கு எதிரானவர் என்பதால் இந்த இரு கட்சிகளும் அவ்வப்போது அவரை அவமதித்து வருகின்றன. இந்தியாவில் வறுமைக்கு காங்கிரசின் உரிம ராஜ்ஜியமே காரணம். அதன் தலைவர்களின் குடும்பங்கள் பணக்காரர்களாக மாறியபோது, ​​மக்கள் ஏழைகளாகவே இருந்தனர். இதில் பட்டியலின மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)