Skip to main content

மும்பை ரயில்நிலைய கூட்டநெரிசலுக்கு கனமழைதான் காரணம்?

Published on 11/10/2017 | Edited on 11/10/2017
மும்பை ரயில்நிலைய கூட்டநெரிசலுக்கு கனமழைதான் காரணம்?

மும்பை ரயில்நிலையத்தில் பலர் உயிரிழக்கக் காரணாகிய கூட்டநெரிசல் விபத்து ஏற்பட கனமழைதான் முக்கியக் காரணம் என விசாரணைக் குழு அறிக்கை அளித்துள்ளது.

மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் ரயில்நிலையத்தில் உள்ள ரயில்வே மேம்பாலத்தில் திடீரென எழுந்த வதந்தியில் ஏற்பட்ட கூட்டநெரிசலின் காரணமாக, செப்டம்பர் 29ஆம் தேதி 23 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து ஏற்படுவதற்கு வதந்தி உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரிக்க மேற்கு ரயில்வே சார்பில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. அந்தக்குழு தற்போது கூட்டநெரிசலுக்கு கனமழைதான் காரணம் என அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

கூட்டநெரிசலில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள், அந்த இடத்திற்கு நெருக்கமாக கடை வைத்திருப்பவர்கள் என பலரது வாக்குமூலங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவர்களில் யாரும் மின்கசிவு ஏற்பட்டதுதான் காரணம் என தெரிவிக்கவில்லை.

மேலும், சிலர் கனமான சுமைகளை வைத்திருந்ததாலும், மழையின் அளவு அதிகரித்ததை அடுத்து மழைக்காக ஒதுங்கியவர்களின் கூட்டம் அதிகரித்ததாலும் கூட்டநெரிசல் ஏற்பட்டதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இதுமாதிரியான சூழல்களில் பொதுமக்கள் கனமான பொருட்களை, சுமைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் அந்த அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சார்ந்த செய்திகள்