கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் - 11 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் குறித்த வழக்கு விசாரணையில், 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் கோத்ரா ரயில்நிலையத்தில், அயோத்தியில் புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்கள் பயணித்த சபர்மதி விரைவுரயிலின் எஸ் 6 பெட்டிகள் தீவைக்கப்பட்டன. இதில் அந்தப் பெட்டியில் பயணித்த 59 புனித பயணிகள் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்து அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதும், நூற்றக்கணக்கானவர்கள் காணாமல் போன சம்பவமும் நடந்தேறியது.
இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களாக 63 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு, அவர்களில் 31 பேர் குற்றவாளிகள் என குஜராத் அரசால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக்குழு அறிவித்தது. இவர்களில் 11 பேருக்கு மரணதண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் அளித்து தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு குறித்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், குஜராத் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 11 பேரின் தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்துள்ளனர்.