Skip to main content

“அரசியல் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம்..” - மணிப்பூர் பற்றி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

"Don't think I am talking about politics.." - Union Minister Nirmala Sitharaman on Manipur

 

கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசு சார்பாக தாமிரபரணி நதிக் கரையில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், ஆதிச்சநல்லூரில் தள அருங்காட்சியகம் அமைக்கவும், அதன் மேல் கண்ணாடி பேழை அமைத்து பார்வையாளர்கள் பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

 

அதன்படி, ஆதிச்சநல்லூரில் கடந்த 2021 ஆம் ஆண்டில் அகழாய்வு பணிகள் நடைபெற்றது. அந்த பணிகளில், நூற்றுக்கும் அதிகமான முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருள்கள், தங்க நெச்சி பட்டைகள், சங்ககாலத்தினர் வாழ்ந்த பகுதிகள், வெண்கலத்தால் ஆன நாய் உருவம், மரத்தால் ஆன கைப்பிடிகள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன. அகழாய்வு பணிகளின் போது கண்டெடுக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பொருள்களை அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

 

இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இந்த விழா முடிந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிர்மலா சீதாராமன், “அரசியல் பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். நாடாளுமன்றத்தில் அரசியல் செய்வதால் நானும் அரசியல் பேசுகிறேன். மணிப்பூரில் 2013 ஆம் ஆண்டில் ஒரு வருடத்திற்கு மேலாக வன்முறை நீடித்தது. அந்த மாநில கிராம மக்களுக்கு தேவையான மருந்து, சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவை போக முடியாமல் இருந்தது. அந்த நிலையில் கூட, ஐக்கிய முற்போக்கு அரசைச் சேர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் அந்த மாநிலத்திற்கு செல்லக்கூட இல்லை. ஆனால், தற்போது இருக்கின்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூருக்குச் சென்று 3 நாள்கள் தங்கி ஒவ்வொரு கேம்பிற்கும் சென்று மக்களை சந்தித்து நிலைமையை அறிந்துள்ளார். அதைப் பற்றி நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசத் தயாராக இருக்கும் போது அதை நாங்கள் கேட்கமாட்டோம், பிரதமர் தான் பேச வேண்டும் என்று சொல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்