பெண்களின் கூந்தலை வெட்டும் மர்மக் கும்பல் – காஷ்மீரில் பதற்றம்!

காஷ்மீரை சொர்க்கபுரியாக மாற்றுவோம் என்று ராஜ்நாத் சிங்கும், நிர்மலா சீத்தாராமனும் அறிவித்த சில நாட்களிலேயே அங்கு பாதுகாப்புப் படையினருடன் பெண்கள் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
செப்டம்பர் மாதத்திலிருந்து இதுவரை 65 பெண்களின் ஜடை பின்னல் மர்ம நபர்களால் வெட்டப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் ஞாயிறன்றும் ஸ்ரீநகர் படமாலூ என்ற இடத்தில் மீண்டும் பெண்களின் பின்னல் வெட்டப்பட்டது. இதைக் கண்டித்து முழு அடைப்புக்கு அழைப்பு விடப்பட்டது. இந்த முழு அடைப்பின் போது பாதுகாப்புப் படையினருடன் பெண்கள் மோதும் நிலை உருவானது. அவர்களை கலைக்க போலீஸார் அடக்குமுறை பிரயோகித்தாலும், அதையும் மீறி பாதுகாப்புப் படையினரை பெண்கள் தாக்கினர்.
பிரிவினை அமைப்புகளின் அழைப்பை ஏற்று அரசு அலுவலகங்களும், வர்த்த நிறுவனங்களும், ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களை கண்ணீர்புகைக் குண்டுகள் வீசி கலைக்க போலீஸார் முயன்றனர்.
இந்த கலவரத்தில் வெளிநாட்டினர் பலர் தங்கள் வழித்தடத்தை தவறவிட்டனர். அவர்களை போலீஸார் மீட்டனர்.