Skip to main content

வாக்கி-டாக்கி ஊழல் பின்னணி!

Published on 13/10/2017 | Edited on 13/10/2017


முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டிக்குமிடையே நடக்கும் பனிப்போர், வாக்கி-டாக்கி ஊழல் மூலம் வெடித்திருக்கிறது. முதல்வரை மையமாக வைத்துக்கொண்டு காவல்துறையின் உயரதிகாரிகள் சிலர் அமைத்திருக்கும் சிண்டிகேட் லாபியினர், நிரஞ்சன் மார்டிக்கு எதிராக கச்சைக்கட்டத் துவங்கியிருப்பதுதான் தமிழக உள்துறையின் தற்போதைய ஹாட் டாபிக்.

""முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆஸ்தான சிஷ்யர்தான் நிரஞ்சன் மார்டி. நெடுஞ்சாலைத்துறையின் முதன்மைச்செயலாளராக இருந்த நிரஞ்சன் மார்டி அப்போது எடப்பாடியின் அனைத்து யோசனைகளுக்கும் வளைந்துகொடுத்தார். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை நினைத்த மாத்திரத்தில் பந்தாடிய ஜெயலலிதா, நெடுஞ்சாலைத்துறையில் பல ஊழல்கள் அம்பலமாகியும் நிரஞ்சன் மார்டியை மட்டும் கை வைக்கவில்லை. காரணம், சசிகலா மூலம் நிரஞ்சன் மார்டிக்காக எடப்பாடி செய்த சிபாரிசுதான்.



எடப்பாடி  முதல்வரானதும், உள்துறைச் செயலாளராக இருந்த அபூர்வ வர்மாவை  அகற்றிவிட்டு, அந்தப் பதவியில்  நிரஞ்சன் மார்டியை நியமிக்கிறார். தனதுவசம் இருக்கும் உள்துறையில் தனக்கு நம்பிக்கையான அதிகாரி இருப்பதுதான் எல்லாவற்றுக்கும் சரியானது என்பதே எடப்பாடியின் கணக்கு. அந்தக் கணக்கு தப்பானதன் வெளிப்பாடுதான் வாக்கி-டாக்கி ஊழல் சர்ச்சைகள்'' என்கின்றனர் கோட்டையிலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

உள்துறையின் முதன்மைச்செயலாளராக நியமிக்கப்பட்டபோது, தமிழக உளவுத்துறையின் டி.ஜி.பி.யாகவும், காவல்துறையின் தலைவராக (சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.) கூடுதல் பொறுப்பிலும் இருந்தார் டி.கே.ராஜேந்திரன். ராஜேந்திரனும் முதல்வர்  எடப்பாடிக்கு விசுவாசமானவர். அது குறித்து நம்மிடம் விவரித்த ஒரு உயரதிகாரி, ""நிரஞ்சன் மார்டியை சந்தித்து, சில பல விசயங்களை முறையிட்டோம். ஜெயலலிதா இருந்தபோது டி.கே.ராஜேந்திரனுக்கும் அப்போதைய டி.ஜி.பி. அசோக்குமாருக்கும் குட்கா ஊழல் தொடர்பாக வருமானவரித்துறை அனுப்பி வைத்த கடிதத்தின் மீது ஆக்ஷன் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினோம். அந்தக் கடிதத்தை தேடிப்பார்த்தார் கிடைக்கவில்லை. ஆனால், அசோக்குமாரிடமே தொடர்புகொண்டு விபரமறிந்த நிரஞ்சன், அது குறித்து எடப்பாடியிடமும் தலைமைச்செயலாளர் கிரிஜாவிடமும் விவாதிக்க, அவரை சமாதானப்படுத்தினார் எடப்பாடி. இதனையடுத்துத்தான், அந்த கடிதம் பத்திரிகைகளில் அம்பலமாகி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ராஜேந்திரனுக்கு தலைவலியை கொடுத்து வருகிறது.

காவல்துறை உயரதிகாரிகளின் லஞ்ச ஊழல்களை அம்பலப்படுத்தும் அந்த கடிதம் வெளியானதற்குக் காரணம் நிரஞ்சன் மார்டிதான் என முதல்வரிடம் டி.ஜி.பி. தரப்பிலிருந்து சொல்லப்பட்டதால், நிரஞ்சன் மார்டிக்கும் ராஜேந்திரனுக்கும் பனிப்போர் துவங்கிவிட்டது. இதனால் பல ஃபைல்கள் உள்துறையிலிருந்து டி.ஜி.பி.க்கு அனுப்பி வைக்கப்படுவது அதிகரித்துப்போனது. ஒவ்வொரு முறையும் எடப்பாடி தலையிட்டே சரி செய்யப்பட்டது'' என சுட்டிக்காட்டினார் விரிவாக.

டி.கே.ராஜேந்திரனுக்கு பணி நீட்டிப்பு கொடுப்பதிலும், சட்டம்- ஒழுங்கு டி.ஜி.பி.யாக நியமிப்பதிலும் முரண்டு பிடித்தார் நிரஞ்சன் மார்டி. மத்திய உள்துறைக்கு அனுப்பி வைப்பதற்காக தயாரிக்கப்பட்ட பேனலில் கையெழுத்திடவும் மறுத்தார். முதல்வரும் தலைமைச் செயலாளரும் கொடுத்த அழுத்தத்தினால் வேண்டா வெறுப்பாக கையெழுத்திட்டார். டி.கே.ராஜேந்திரனின் நியமனத்துக்காக கமிட்டியில் வாதாடவும், அப்போதைய பொறுப்பு கவர்னர் வித்யாசாகர்ராவிடம் கையெழுத்துப் பெறவும் கிரிஜாவை அனுப்பிவைத்தார் எடப்பாடி. இதனால் முதல்வர் மீது நிரஞ்சன் மார்டிக்கும், மார்டி மீது ராஜேந்திரனுக்கும் வருத்தம் அதிகரித்தது.

குட்கா ஊழல் தொடர்பாக போடப்பட்டிருந்த ஒரு வழக்கில், "விஜிலென்ஸ் கமிஷனராக தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன் பேரில், நிரஞ்சன் மார்டியிடமிருந்து அப்பொறுப்பு பறிக்கப்பட்டு, ஜெயக்கொடி ஐ.ஏ.எஸ்.ஸை அப்பதவியில் நியமித்தார் எடப்பாடி பழனிச்சாமி. 

நடப்பு நிதியாண்டில் வாக்கி-டாக்கி கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் நடந்த முறைகேடுகளை கண்டறிந்த நிரஞ்சன், இதுபற்றி எடப்பாடியிடம் விவாதித்துள்ளார். அப்போது, கொள்முதலில் நடந்துள்ள ஊழல்களை விவரித்த நிரஞ்சன், ""ஆட்சி மாறி வேறு ஒரு ஆட்சி வந்து இந்த கொள்முதல் ஊழலை கண்டுபிடித்தால் எனக்குத்தான் பிரச்சினை. அதனால் என்னை இந்த பதவியிலிருந்து மாற்றிவிடுங்கள்'' என வலியுறுத்தியுள்ளார். ஆனால், எடப்பாடியோ, ""உங்களை மாற்றினால் தேவையற்ற கேள்விகள் வரும். இந்த ஆட்சி அதன் ஆயுள் காலம்வரை நீடிக்கும். அதனால் வாக்கி-டாக்கியை மறந்துவிடுங்கள்''’என சொல்லியிருக்கிறார்.

எதிர்காலத்தில் பிரச்சினைகள் வந்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்ட நிரஞ்சன், வாக்கி-டாக்கி கொள்முதலை மையமாக வைத்து 11 கேள்விகளை டி.ஜி.பி.க்கு கேட்டு கடிதம் அனுப்பிவைத்து அதனைப் பதிவும் செய்துகொண்டார். இதன் பின்னணியில் அவருக்கு நெருக்கமான ஐ.பி.எஸ்.களின் அட்வைசும் இருக்கிறது. இந்த நிலையில், வாக்கி-டாக்கி ஊழல் குறித்து உள்துறையில் நாம் விசாரித்தபோது, ""காவல்துறையை நவீனமாக்குவதன் ஒருகட்டமாக 10,000 வாக்கி-டாக்கி கொள்முதல் செய்ய நடப்பு நிதியாண்டில் 47 கோடியே 56 லட்ச ரூபாய் மட்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கு மாறாக, 83 கோடியே 45 லட்சத்தில் 4,000 வாக்கி-டாக்கிகளை வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது டி.ஜி.பி. கட்டுப்பாட்டிலுள்ள நிர்வாகம்.  குளோபல் டெண்டர் நடைமுறைக்குப் பதிலாக, ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே கலந்துகொள்ளும்படி வைத்து, அதற்கே ஆர்டரை கொடுத்துள்ளது டெண்டர் கமிட்டி. இந்த கமிட்டியில் டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி. நிர்வாகம், கூடுதல் டி.ஜி.பி. நவீனமயமாக்கல், ஐ.ஜி. தொழில்நுட்பம் ஆகிய உயரதிகாரிகள் அடங்குவர்.

பெங்களூரை சேர்ந்த மோட்டரோலா சொல்யூசன்ஸ் என்ற நிறுவனத்துக்கு வாக்கி-டாக்கி ஒப்பந்தத்தைக் கொடுத்துள்ளனர். இது குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, குற்ற நடவடிக்கைகளை தடுத்து தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக வாக்கி-டாக்கி கருவி பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய கருவிகளை, இறக்குமதி செய்ய லைசென்ஸ் இல்லாத நிலையில், ஜூலை 2017-க்குள் அந்த நிறுவனத்துக்கு லைசென்ஸ் வாங்கித் தந்துவிடுவதாக சொல்லியிருக்கிறார்கள். இத்தனை சலுகைகள் ஏன் என்ற கேள்வியுடன், சேம்பிளுக்காக கொடுக்கப்பட்ட ஒரு கருவியை வாங்கி, தனக்கு நம்பிக்கையான ஒரு அதிகாரியிடம் தந்து சுரங்க பகுதிகள், மலைப்பிரதேசங்கள், கடலோர பகுதிகளில் அந்த கருவியைக்கொண்டு சென்று அதன் தரத்தை பரிசோதிக்குமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார் நிரஞ்சன் மார்டி. மூன்று இடங்களிலும் அது சரியாக வேலை செய்யவில்லையாம். இதன்பிறகே, 11 கேள்விகள் கேட்டு கடிதம் அனுப்பினார் நிரஞ்சன்'' என சுட்டிக்காட்டினார்கள்.

இந்த ஊழலின் பின்னணி குறித்து மேலும் நாம் விசாரித்தபோது, ""முதல்வர் எடப்பாடியின் ஒப்புதலுடன்தான் இந்த ஊழல் நடந்துள்ளது. அதாவது, ஒப்பந்தம் பெற்றுள்ள நிறுவனம் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு நெருக்கமானது. எடப்பாடியின் உறவினர் மாணிக்கம், எடியூரப்பாவின் நண்பர். அவர் மூலமாகத்தான் எடியூரப்பா உதவியுடன், தனது நெருக்கடிகளை சமாளிக்க மத்திய அரசில் செல்வாக்குள்ள சிலரின் உதவியை நாடினார் எடப்பாடி. அதற்கு நன்றிக்கடன்தான் வாக்கி-டாக்கி''‘என ரகசியங்களை போட்டுடைத்தனர்.

""நடப்பு நிதியாண்டில் காவல்துறைக்கு 6,483 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிக்னல் கருவிகள், மோட்டார் வாகனங்கள், தீயணைப்பு உபகரணங்கள், நவீனமயமாக்கலுக்குத் தேவையான தொழில்நுட்பக் கருவிகள், எலெக்ட்ரிகல் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ் கருவிகள் உள்ளிட்ட நவீன கருவிகளை கொள்முதல் செய்வதற்காக மட்டுமே 860 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. வாக்கி-டாக்கியில் மட்டுமே 65 கோடி ரூபாய் ஊழல் எனில் 860 கோடி ரூபாயில்?'' என கேள்வி எழுப்பும் தலைமைச்செயலக அதிகாரிகள், ""டி.ஜி.பி. பதவிக்கு வரத்துடிக்கும் ஒரு உயரதிகாரி, ஜெயலலிதாவால் தண்டிக்கப்பட்ட ஓய்வுபெற்ற அதிகாரி, விரைவில் ஓய்வுபெறும் ஒரு அதிகாரி ஆகியோரின் ஆலோசனையில்தான் நிரஞ்சன் மார்டி எழுதிய கடிதம் லீக் செய்யப்பட்டது''’என்றும் விவரித்தனர். இந்த நிலையில், நிரஞ்சன் மார்டியை மாற்றுவதற்கு ஒரு டீம் கச்சைக்கட்டத் துவங்கியுள்ளது.

-இரா.இளையசெல்வன்

சார்ந்த செய்திகள்