விஷால் களத்திற்கு வருவது நல்லதுதான் - கரு.நாகராஜன் பேட்டி

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்தமுறை நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிட்டவர் கங்கை அமரன். தற்போது உடல்நலக் குறைவு காரணமாக அவர் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக பிரபலமான வேட்பாளரை களம் இறக்குவோம் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறிவந்தார். இந்த நிலையில் வேட்பாளர் அறிவிப்பு காலதாமதமானதால் ஆர்.கே.நகரில் தமிழிசை சவுந்தரராஜன்தான் களம் காணப்போகிறார் என்ற செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. உடனடியாக பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு ஏற்கனவே 2016ல் மயிலாப்பூரில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கரு.நாகராஜனை அறிவித்தனர்.
கரு.நாகராஜன் நக்கீரன் இணையதளத்திடம் தனது கருத்தினை பகிர்ந்து கொண்டார்...
5 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடனில் உள்ளது தமிழகம். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் அதிக கடன் உள்ளது. எல்லா தமிழர்களையும் கடன்காரர்களாக்கியுள்ளார்கள்.
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள் பெருகிக்கொண்டிருக்கின்றன. சென்னையில் ராயப்பேட்டை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளைத்தான் இதுவரை நாடிக்கொண்டிருக்கிறோம். ஒரு அப்பல்லோ மருத்துவமனை, சென்னையில் மட்டும் 16 கிளைகள் திறந்துள்ளது. ஆனால் அரசு மருத்துவமனைகள் எத்தனை புதிதாக வந்துள்ளது?.
தமிழக விவசாயிகளின் தீர்க்கப்படாத பிரச்சனைகள் இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் விவசாயிகளின் கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்தார்கள். ஆனால் தமிழகத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்வதற்கான சக்தி இல்லை என்கிறார்கள். உரிய நேரத்தில் இன்சூரன்ஸ் பணம் கட்டியிருந்தால் பலபேருக்கு அந்தப் பணம் கிடைத்திருக்கும். இதையெல்லாம் சொல்லித்தான் மக்களிடம் ஓட்டுக்கேட்போம்.

பிரச்சாரத்திற்கு தேசியத் தலைவர்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளதா?
பொதுவாக இடைத்தேர்தலுக்கு தேசியத் தலைவர்கள் யாரும் வருவதில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சொல்லியிருக்கிறாரே.
இந்தத் தேர்தலில் திமுகவுக்குத்தான் வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள். அதோடு, அதிமுக உடைந்ததால் இரண்டு அணிக்கும் கடுமையான போட்டி இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த கடுமையான போட்டியில் பாஜகவின் நிலை என்ன?
ஆர்.கே.நகர் தொகுதியில் திமுகவும் தோல்வியை சந்தித்திருக்கிறது. அதிமுகவும் தோல்வியை சந்தித்திருக்கிறது. மாறி, மாறி வந்திருக்கிறார்கள். ஆகையால் அதிமுகதான் மீண்டும் வெற்றிபெறும் என்று சொல்ல முடியாது. புதிய மாற்றத்திற்கான வாய்ப்பும் உள்ளது.
பாஜக வேட்பாளராக உங்களை அறிவித்த உடன் நடிகர் விஷால் சுயேட்சையாக களம் காணப்போவதாக அறிவித்துள்ளாரே?
பிரபலங்கள் வரட்டும், அப்போதுதான் களம் மாறும். ஜெயித்தாலும், தோற்றாலும் அடுத்த முறை நாம்தான் என்று நினைக்கும் கட்சிகள் இருக்கும்போது, புதிது புதிதாக வரட்டும். மக்களுக்கு நல்லது செய்தால் நல்லதுதான். விஷால் எந்த நம்பிக்கையில் இறங்கியிருக்கிறார் என்பது தெரியவில்லை. இளைஞர்கள் தன் பக்கம் இருக்கிறார்கள் என்கிறார். இளைஞர்களின் மனநிலை எப்படி இருக்கும் என்று தெரியாது. இது அவருக்கு ஒரு சோதனை களம்தான். கமல் மாதிரி பேசிக்கொண்டிருக்காமல் களத்திற்கு வந்தது சரிதான். பாஜகவுக்கும் விஷாலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாஜகவில் உள்ள ஒரு ஓட்டைக்கூட இவரால் பிரிக்க முடியாது. மற்ற கட்சிகளின் ஓட்டுக்களை இவர் பிரிப்பாரா என்பது தேர்தல் முடிவில்தான் தெரியவரும்.
-வே.ராஜவேல்
படங்கள்: எஸ். பி., சுந்தர்