
நீட் தேர்வில் மருத்துவ இடம் கிடைக்காததால் தற்கொலை செய்த மாணவி அனிதாவின் நினைவு தினத்தையொட்டி, விருத்தாசலத்தில் நீட் தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், கரோனா காலகட்டத்தில் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் கட்டாய கட்டண வசூலிப்பை நிறுத்த வேண்டும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் இறுதியாண்டு தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
புரட்சிகர மாணவர் அமைப்பின் இளைஞர் முன்னணி சார்பில் விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
புரட்சிகர மாணவர் அமைப்பின் இளைஞர் முன்னணி மாவட்ட செயலாளர் மணியரசன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மணிவாசகம், பால்ராஜ், பூங்குழலி, மணிகண்டன், கணேஷ், அர்ஜுன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீட் தேர்வால் தமிழக மாணவர்களின் மருத்துவ கல்வி உரிமை பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மாணவி அனிதாவை தொடர்ந்து தற்கொலைகள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த ஐந்து மாத காலமாக கரோனா தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் கல்விக் கட்டணத்தை கட்ட வேண்டும். அப்படி இல்லையெனில் பல்கலைக்கழகத்தில் இருந்து மாணவர்கள் நீக்கப்படுவார்கள் என மிரட்டல் விடுகிறது எனக்கூறி கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.