
சேலம் மாநகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் இருந்து சேலம் மாநகராட்சி பகுதிகளுக்கு பழைய குடிநீர் குழாய்களை நீக்கிவிட்டு புதிய குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. நெத்திமேடு பகுதியில் புத்தூர் இட்டேரி ரோடு பகுதியில் பழைய குழாய்களை நீக்கிவிட்டு புதிய குழாய் அமைக்கும் பணி ஜேசிபி உதவியுடன் நடைபெற்றது.
அப்போது தோண்டப்பட்ட பள்ளத்தில் கம்பம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பணியில் இருந்த பெரியண்ணன் என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் சித்தன், பூவரசன் என்ற இருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.