Skip to main content

“பொய் வழக்கும் போராட்டமும்”

Published on 01/02/2018 | Edited on 01/02/2018
“பொய் வழக்கும் போராட்டமும்”
நூல் அறிமுக விழா


“நக்கீரன்” இதழின் முதன்மை செய்தியாளர் பெ.சிவசுப்ரமணியம் எழுதி நக்கீரன் பதிப்பகம் வெளியிட்டுள்ள பொய் வழக்கும் போராட்டமும் நூல் அறிமுக விழா சேலம் வசந்தம் ஹோட்டலில் 28.01.2018-அன்று மாலை நடந்தது.



தியானம் தவிர்த்த தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை புகைப்பட கலைஞர் முனீர் உணர்வு பெருமிதத்துடன் பாடினார், திரண்டிருந்த கூட்டத்தினருடன் இனைந்து பாடி முடிக்க, சேலம் மாவட்ட செய்தியாளர்கள் மற்ற தலைவர் கதிரவன் வரவேற்புரையுடன் தொடங்கியது.

நூல் திறனாய்வு செய்த மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் அவர்கள் பேசும்போது துப்பறியும் நாவலாசிரியர் “ஷெர்லாக் ஹோம்ஸ்” நூலில் வரும் காதாபாத்திரம் போல இந்த நூல் பரபரப்பும், மர்மமும் நிறைந்ததாக வருகிறது.

சேலம் மாவட்டம், ஆத்தூரில் தன்னை போலீசார் கடத்தியதில் தொடங்கும் இந்த நூல், தன்மீது போடப்பட்ட எட்டு பொய் வழக்குகளை பற்றியும், அதிலிருந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தது, பத்து ஆண்டுகள் நீதிமன்றங்களுக்கு நடந்தது, அங்கே இந்த பொய் வழக்குகளை நடத்த போலீசார் பொய்யாக புனைந்த கதை, அதை நிரூபிக்க கொண்டு வந்து நிறுத்திய சாட்சிகள் என ஒவ்வொரு கட்டமாக விவரிக்கிறது இந்த நூல்.


536-பக்கங்களை கொண்ட இந்த நூல், யார் ஒருவரைப்பற்றியும் இல்லாமல், காவல் நிலையம், சிறை, நீதிமன்றம் என நூலாசிரியரின் பத்தாண்டுகால வாழ்கையில் அவர் சந்தித்த பலரைப் பற்றியும் உள்ளது.

இந்த செய்தியாளர் மீது பொய்யாக புனையப்பட்ட எட்டு வழக்குகளில் இருந்து அவர் விடுதலை பெற்று வெளியே வரும் வரையிலான போராட்டம் ஒவ்வொரு எழுத்தாளனும், செய்தியாளர்களும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, நக்கீரன் ஆசிரியரை கைது செய்யவேண்டும், வாரம் இருமுறை வெளியாக்கிக் கொண்டிருந்த நக்கீரன் இதழை நிறுத்தவேண்டும் என்று திட்டம் போட்டது.

இதற்கு துணையாக தமிழக காவல்துறை அத்துமீறிய பல வேலைகளை செய்தது. வழக்கமாக கோபி நீதி மன்றத்துக்கு எதிரில் உள்ள வழக்குரைஞர் அப்புசாமியின் வீட்டிற்கு நான் மற்றும் ஆசிரியர் போய்வருவோம்.

ஆசிரியரை கைது செய்யவேண்டும் என்று அரசு முடிவு செய்திருந்த நேரத்தில், நானும் எனது ஜூனியர் வக்கீல்களும் அந்த வீட்டிற்கு சென்றிருந்தோம். அப்போது, ஆசிரியரும் உள்ளே இருக்கிறார் என்ற எண்ணத்தில், சோவை சி.பி.சி.ஐ.டி போலீசார், கோபி போலீசார், அதிரடிப்படை போலீசார் என மூன்று அணியினரும் அந்த வீட்டை சுற்றி வளைத்து ஆசிரியரை கைது செய்ய முயன்றனர்.

வழக்குரைஞர் அப்புசாமியின் மனைவி ஒரு மருத்துவர், அவருடைய் வீட்டை போலீசார் சுற்றி வலைத்ததை தொடர்ந்து, அங்கு வந்த காவல் ஆய்வாளரை நாங்கள் வீட்டில் பிடித்து உட்கார வைத்துவிட்டு, இதுகுறித்து உயர் நீதிமன்றத்துக்கு புகார் கொடுத்தோம்.

கடைசியில், தங்கள் காவல் நிலைய வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரைத் தேடிவந்தோம் என்று ஆய்வாளர் எழுதிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார். இதுபோல பல போராட்டங்களை நக்கீரன் நடத்தி வெற்றி பெற்றுள்ளது.

நக்கீரன் ஆசிரியர் எழுதியுள்ள சேலஞ்ச், யுத்தம் போன்ற நூல்களும், சிவசுப்ரமணியம் எழுதியுள்ள இந்த நூலும் வரலாற்று பதிவுகளாகும். சுதந்திர இந்தியாவில் இதழியல் துரையின் நக்கீரன் மேற்கொண்ட போராட்டமானது பொன் எழுத்துகளால் பொறிக்கவேண்டிய சாதனையாகும்.

எனக்குத்தெரிய வேறு எந்த ஒரு இதழியல் நிறுவனமும் இவ்வளவு வீரம் சொரிந்த ஒரு போரை நிகழ்த்தியிருக்க முடியாது.” என்றார்.



திராவிடர் விடுதலைக்கழக தலைவர் கொளத்தூர் மணி பேசும்போது, “வீரப்பன் வழக்கில் தொடர்புடையதாக கர்நாடக காவல்துறையினாரால் கைது செய்யப்பட்ட முப்பதுக்கும் அதிகமான தமிழகத்தை மக்களை, சிறைவைக்க அவர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துக்கொண்டு போகாமல் நீதிபதியின் வீட்டுக்கு அழைத்து சென்று காவல் நீடிப்பு செய்துள்ளனர்.

இந்தியாவில் வேறு எந்த ஒரு மாநிலத்திலும் இதுபோன்ற ஒரு மனித உரிமை மீறல் எங்கும் நடந்திருக்க வாய்ப்பில்லை. கொள்ளேகால் நீதிபதியாக இருந்த ஒருவர் முழுக்க முழுக்க போலீசாருக்கு ஆதரவாக செயல் படுபவராகவே இருந்தார்.

அதை நானும் நேரில் கண்டேன். எனக்கு கைவிலங்கு போட்டு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர். இது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று சொன்னேன். எங்களிடம் உள்ள சட்ட நூலில் அப்படியில்லை என்று சொன்னார் அந்த நடுவர், சரி எந்த விதியின் கீழ் கை விலங்கு போடச்சொல்லியிருக்கிறது என்பதை குறிப்பிட்டு எனக்கு கை விலங்கு போடலாம் என்று எழுதி உத்தரவு போடுங்கள் என்று சொன்னேன்.

அதற்கு பிறகு சாம்ராஜ்நகருக்கு ஆள் அனுப்பி சட்ட நூலை வாங்கிக்கொண்டு வந்து பார்த்துவிட்டு, இவருக்கு கை விலங்கு  போடத் தேவையில்லை என்று உத்தரவு போட்டுவிட்டு, உங்களிடம் தான் துப்பாக்கி உள்ளதே...? விலங்கு போடாமலே கூட்டிக்கொண்டு போங்கள் என்று சொல்கிறார். இது மறைமுகமாக வழிக்காவலுக்கு வந்துள்ள போலீசாரிடம் தேவைப்பட்டால் சுட்டுவிடுங்கள் என்று சொல்லும் வகையில் கூறுகிறார்.



முத்துக்குமார் என்ற ஒருவரை போலீசார் தேடிவருகிறார்கள். அவருடைய வீட்டில் அவருடைய உறவினர்கள் பல முத்துகுமார் இருந்துள்ளார்கள். மலேசியாவில் இருந்து வந்திருந்த இவர்கள் தேடிய முத்துகுமாரின் தம்பியான மற்றொரு முத்துக்குமாரை பிடித்துக் கொண்டுவந்து பொய்யாக வழக்கு போட்டு சிறையில் தள்ளி விட்டனர்.

பாண்டியன் என்பவருக்கு பதிலாக மற்றொரு பாண்டியனை கைது செய்து கொண்டுவந்து அவருடைய கையை உடைத்து சிறைக்கு உள்ளே போட்டுள்ளனர். கொலை செய்துவிட்டேன் என்று சொல்லி ஒருவர் தானாக முன்வந்து காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அதற்குப் பிறகு அவரை அடித்து உதைத்து அவருடைய காலை உடைத்து கொண்டுவந்து சிறையில் அடைத்தனர்.

வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் அந்த மலைப்பகுதியில் போலீசார் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் கணக்கில் அடங்காதவை. அவையெல்லாம் சதாசிவம் கமிசன் முன்பாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உரிமை மீறல்களை மேற்கொண்ட அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை.

அதை மனித உரிமையை மீறிய செயல்கள் நாடங்கிலும் பல இடங்களில் நடந்தாலும் குறிப்பாக கர்நாடக மாநிலத்தில் நடக்கும் கொடுமைகள் மிகமிக அதிகம். அந்த கொடுமைகளை இந்த நூலில் சிவசுப்ரமணியம் வரிசையாக படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

இந்த நூலை ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்கவேண்டும், இது யாருக்கோ நடந்தது என்று நினைத்து விடவேண்டாம். காவல்துறை சிறைத்துறை, நீதிமன்றங்களில் நடக்கும் இந்த சட்ட மீறல்கள் நாளை உங்களுக்கும் நடக்கலாம். இல்லை, கட்டாயம் நடக்கும். அதை நீங்கள் எதிர் கொள்ளவேண்டும் என்றால் இந்த நூலை வாங்கிப்படியுங்கள்.

செய்தியாளர் ஒருவர் எழுதிய நூலாக மட்டும் இதை நான் பார்க்கவில்லை. நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் அவசியம் படித்து தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகள் ஏராளமாக உள்ளது. இது ஒவ்வொருவரும் தங்களை காவல்துறையின் அடக்கு முறையில் இருந்து பாதுகாத்துக் கொல்வதற்காகவாவது படிக்கவேண்டிய நூலாகும்.” என்றார்.



எழுத்தாளர் கோவை பாமரன் பேசும்போது, “இந்த நாட்டிலுள்ள கடைக்கோடி மலைப்பகுதியில் வாழும் ஒரு பழங்குடி மக்கள் சமூகத்தில் பிறந்த ஆதிவாசி குடிமகன் ஒருவனுக்கு சட்டம், காவல், நீதிமன்றம் என்ற எதைப்பற்றியுமே தெரியவில்லை.

அவனது வேலையே அந்தப்பகுதிக்கு வருவோருக்கு சமையல் செய்யும் பாதத்திரங்களை கழுவிக்கொடுக்கும் வேலையை அவன் செய்துள்ளான்.  அந்த அளவுக்குத்தான் அவனுக்கு அறிவும், வெளியுலகம் பற்றியும் தீர்ந்துள்ளது.

இந்த ஆதிவாசிக்கு வீரப்பனுக்கும், காவல்துறைக்கும் உள்ள வேறுபட்டு தெரியவில்லை. இரண்டு இடத்திலுமே பாத்திரம் கழுவும் வேலையை செய்தவனை, வீரப்பனுக்கு உதவினான் என்று அதிரடிப்படையினர் கைது செய்து கொண்டுவந்து ஒன்பது ஆண்டுகள் சிறையில் வைத்துள்ளனர்.

இந்த கால கட்டத்தில் அவனுடைய மனைவி இறந்து போய்விடுகிறார். வழக்கிலிருந்து விடுதலையான அந்த ஆதிவாசி வீட்டுக்கு போகிறான், அங்கே அவனுக்கு சாப்பாட்டு போட ஆளில்லை. சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அடுத்த மூன்று மாதங்களில் அவன் உயிரிழந்து விடுகிறான்.

சிவப்பு விளக்கு எரிந்தால் நிற்கவேண்டும் என்பதும், பச்சை விளக்கு எரிந்தால் போகலாம் என்பது நகரத்தில் படித்து,  சட்டம், நீதி, காவல் என்ற கட்டமைப்புகளை தெரிந்து வைத்துள்ள நமக்குத்தான் தெரியும்.

வெளியுலக தொடர்புகளே இல்லாத மலைப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் பழங்குடி மக்களுக்கு இதைப் பற்றியெல்லாம் தெரியுமா...? என்பதை பற்றி இந்த அதிகாரிகள் ஏன் யோசிப்பதில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.

குறிப்பிட்ட காலம் வரை வீரப்பன் என்பவன் யாரெனத் தெரியாமல் மர்மமாகவே இருந்தது. மாயாவியாக இருந்த வீரப்பனை நக்கீரன் தான் வெளியே கொண்டு வந்தது. 1996-இல் தமிழ்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில், வீரப்பன் நேர்காணல் தொலைக்கட்சியில் வெளியாகிறது.

அப்போது, ஆளும்கட்சியாக இருந்த ஜெயலலிதா படுதோல்விக்கு உள்ளாகிறார். அதற்கு நக்கீரன் வெளியிட்ட வீரப்பன் வீடியோவும் முக்கிய காரணமாக உள்ளது. இதன் பின்னியிலேயே தான் சிவசுப்ரமணிமும் கடத்தப்படுகிறார். இவ்வளவு பொய் வழக்குகளையும் நக்கீரன் குடும்பம் எதிர்கொள்கிறது.

ஆங்கில சேனல் ஒன்று வீரப்பன் பேசியிருந்த வீடியோவுக்கு நான்கு கோடிரூபாய் பணம் கொடுப்பதாக கேட்டுள்ளது. அந்த ஆங்கில சேனலில் வீரப்பன் பேட்டி ஒலிபரப்பானால், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் பார்க்க முடியாது. தமிழ் சேனலில் ஒலிபரப்பானால் மட்டுமே பெரும்பாலான மக்கள் பார்க்கமுடியும் என்ற நிலையில் அந்த வீடியோவை தமிழ் சேனல் ஒன்றுக்கு இலவசமாக கொடுத்துள்ளார் நக்கீரன் கோபால்.

மைசூர் சிறையில் உள்ள பொதுக் கழிப்பறைகளின் நிலையை நூலாசிரியர் விவரித்துள்ள விதம், சிறைக்குள்ளவர்களை எல்லோரும் மனிதர்களாகவே அதிகாரிகள் நினைப்பதில்லை என்பது தெரிகிறது.

விஜயகுமார், கெம்பையா போன்ற ஐ.பி.எஸ் படித்து முடித்துள்ள மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கும் கூட மனித உரிமைகள் பற்றிய அக்கறையே கொஞ்சங்கூட இல்லை என்பது வேதனையாகத்தெரிகிறது.

இதுபோல எண்ணற்ற கொடுமைகளை இந்த நூல் வெளியில் கொண்டு வருகிறது. இதை நான் ஒரு நூலாகப் பார்க்கவில்லை, சிவசுப்ரமணியம் என்ற மனிதனின் வரலாறாகவும், சிறைக்குள்ளும், வெளியிலும் உள்ள பல அப்பாவி மக்களின் வாழ்கையை படம் பிடித்தும் காட்டுகிறது.” என்றார்.



பதிப்பாசிரியர் நக்கீரன் கோபால் பேசும்போது, “நான் எழுதிய சேலஞ்ச் மற்றும் யுத்தம் போன்ற நூல்களில் நல்லவர்களை பற்றி  எதையுமே எழுதவில்லை. நாங்கள் சந்தித்த கொடுரமானவர்களை பற்றி மட்டுமே எழுதினேன்.

ஆனால், இந்த நூலில் தம்பி சிவசுப்ரமணியம் தான் சந்தித்த பல நல்லவர்களை பற்றியும் எழுதியுள்ளார். குறிப்பாக, சாம்ராஜ்நகர் நீதிபதி தேவராஜ் பட், சத்தியமங்கலம் நீதிபதி சுப்பிரமணியம், பெங்களூர் உயர் நீதிமன்ற நீதிபதி குருராஜன், கோவை நீதிபதி ஜஸ்டின் டேவிட் என நல்ல மனிதர்கள் பலரைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

வெளியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் சிவசுப்ரமணி அப்பா உயிரை விட போகின்ற நேரம். உயிரோடு இல்லாவிட்டாலும், அவருடைய முகத்தை காட்டுவதற்காகவாவது சிவாவை உடனே வெளியில் கொண்டுவர வேண்டுமென்று நக்கீரன் முயற்சி செய்தது.



கடைசியாக பிணை எடுக்க வேண்டிய தடா வழக்கில் ஒரே நாளில் பிணையில் எடுத்தோம், அன்றயை ஜாமீனுக்கு ஆள் நிறுத்தி ஜாமீன் உத்தரவை வாங்கினோம். மைசூருக்கும், தமிழ் நாட்டுக்கும் போக்குவரத்து நின்று போயிருந்த நிலையிலும், மறுநாள் காலை மைசூரில் இருந்த ஜாமீன் மனுதாரர்களை கோவைக்கு கொண்டுவந்து, இங்குள்ள நீதி மன்றத்திலும் ஜாமீன் எடுத்து, சிவாவை வெளியில் கொண்டுவரும் முயற்சியில் நாங்கள் நடத்திய இறுதிக்கட்ட போராட்டம், இனிமேல் வேறு எவர் ஒருவராலும் செய்ய முடியாத சாதனையாகும். இதைப்பற்றிய செய்திகளை கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் எழுதியுள்ளார்.

தம்பி சிவசுப்ரமணியம் எழுதியுள்ள “பொய் வழக்கும் போராட்டமும்” என்ற நூலைப் போல ஒரு நூலை இன்னொருவரால் இனிமேல் எழுதமுடியது. இவ்வளவு கொடிய போரட்டங்களை இனியொரு பத்திரிகையாளர் சந்திக்கவும் கூடாது என்பதே இந்த நூலின் வாயிலாக நாங்கள் வைக்கும் வேண்டுகோளும் கூட என்றார்.

சார்ந்த செய்திகள்