Skip to main content

தினகரனை சசிகலா சந்திக்காதது ஏன்?

Published on 12/10/2017 | Edited on 12/10/2017
தினகரனை சசிகலா சந்திக்காதது ஏன்?

சென்னை குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை கவனிப்பதற்காக, பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் இருந்து கடந்த 6ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு 5 நாள் பரோலில் வெளியே வந்தார் சசிகலா. முன்னதாக உரிய அனுமதி பெற்று உறவினர்கள் ஷகிலா, கீர்த்தனா, ராஜராஜன் மற்றும் வழக்கறிஞர் அசோகன் ஆகியோருடன் சிறைக்குள் தினகரன் சென்றார். சுமார் 3 மணி நேரம் தினகரனுடன் தமிழக அரசியல் நிலவரம் குறித்து சசிகலா ஆலோசனை நடத்தினார். இதையடுத்து ஷகிலா, சசிகலாவுக்காக கொண்டு வந்திருந்த பச்சை நிற பட்டுப்புடவை, அணிகலன்களை அவரிடம் வழங்கினார். பின்னர் தினகரனுடன் அவரது காரின் பின்புறம் அமர்ந்து சென்னை வந்த சசிகலா, தி.நகரிலுள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணப்ரியா வீட்டில் தங்கியிருந்தார். 



அன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், சசிகலாவுக்குக் கடுமையான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பரோல் கிடைக்க தாமதமானதற்கு பழனிசாமி அரசுதான் காரணம். அவரை முதல்வராக்கிவிட்டு சிறைக்குச் சென்ற சசிகலா எந்த பாவமும் அறியாதவர். பழனிசாமியை ஆட்சியில் அமரவைத்த ஒரே பாவத்துக்காக இன்றைக்கு சசிகலா ஒரு சிறைக்கைதி போல இருக்கிறார் என குற்றம் சாட்டினார். 

மறுநாள் 7ஆம் தேதியில் இருந்து பரோல் காலம் முடியும் வரை சசிகலாவை தினகரன் சந்திக்கவில்லை, 12ஆம் தேதி காலை பெங்களுரு சிறைக்கு புறப்பட்டபோதும் தினகரன் வரவில்லை. 

சசிகலாவிடம் சில நிர்வாகிகள் தொடர்பு கொண்டு, தினகரன்தான் கட்சியை அழிக்கிறார். அவர் மூத்த நிர்வாகிகளை மதிப்பதில்லை. எடுத்தெறிந்து பேசுகிறார. நான் சொல்வதுதான் இறுதியானது. நான் நினைப்பதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். சர்வாதிகாரிபோல் நடக்கிறார். மூத்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் நமக்கு ஆதரவாக இருந்தார்கள். அவர்களின் கட்சிப் பதவியை பறித்தார். இதனால் அவர்கள் தினகரனுக்கு எதிராக திரும்பிவிட்டனர். உடனடியாக ஒருவரை அவருக்கு பதிலாக பொறுப்பாளராக போடுங்க என்று வலியுறுத்தியதாக செய்திகள் வெளியானது. இதனால்தான் தினகரனை சசிகலா சந்திக்கவில்லை  என்று கூறப்படுகிறது. 

இது தொடர்பாக தினகரன் அணியின் செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

சசிகலா தனது குடும்பத்தினரை பார்ப்பதையே அதிகமாக குறைத்துக்கொண்டார். பெங்களுருவில் இருந்து தினகரன் தனது காரில் சசிகலாவை அழைத்து வந்தார். பெங்களுருவில் இருந்து வந்த சசிகலவை, தொண்டர்கள் நிறைய பேர் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் பார்க்கட்டும் என்பதற்காக தினகரன் வரவில்லை. மேலும், பரோலில் வந்துள்ள சசிகலாவுக்கு அரசியல் ரீதியாக எவ்வித செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நிறைய இருந்தன. அதன் காரணமாகவும் பெங்களுரு புறப்படும்வரை 5 நாட்களாக தினகரன் வரவில்லை. துணைப்பொதுச்செயலாளராக அவர் தனது பணியை மேற்கொண்டு வருகிறார்.

தினகரன் மீது நிர்வாகிகள் சிலர் குற்றச்சாட்டு கூறியதால் அவரை சசிகலா சந்திக்கவில்லை என்று கூறப்படுகிறதே?

அதுபோல் எதுவும் இல்லை. பரோல் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றி, மீறப்படவில்லை என்பதால் இதுபோன்று செய்திகள் வெளியாகின்றன.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்