பேசுனது இவங்கதான்... ஆனா கருத்து ரஜினியோடது?
ரஜினியின் மனதை சொன்ன மூவர்...

இன்று காலை... கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபம்... 'டிசம்பர் 31 அறிவிப்பேன்' என்கிறார் ரஜினி. ரசிகர் கூட்டம் ஆனந்தக்கூச்சலுடன் கரகோஷம் எழுப்பியது, தலைவா, நீ வா தலைவா என்று கூட்டம் கூச்சலிடுகிறது. உடனே ' ஹா...ஹா...ஹா... அன்னைக்கு நான் வருவேன்னு சொல்லல... வருவேனா மாட்டேனா என்பதை அன்றுதான் சொல்வேன்' என்று டிவிஸ்ட் வைத்து முடிக்கிறார்.
மீண்டும் ஒரு ரசிகர் கூட்டம், மீண்டும் ஒரு மண்டபம், மீண்டும் ஒரு மேடை, மீண்டும் ஒரு மைக், மீண்டும் வருவேனா மாட்டேனா என்ற பேச்சு. இத்தனையையும் மீண்டும் மீண்டும் செய்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மே மாதம் எவ்வாறு ரசிகர் சந்திப்பை தொடங்கினாரோ, அதேபோன்று இன்றும் (26 டிசம்பர் 17) தன் ஐந்து நாட்கள் ரசிகர் சந்திப்பைத் தொடங்கினார். ரஜினி, இந்தக் கூட்டத்தில் விருந்தாளிகளாக அழைத்து வந்தவர்கள் இயக்குனர் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானம். மே மாத கூட்டத்தில் இயக்குனர் எஸ் பி முத்துராமன் இருந்தார். இவர்களெல்லாம் தற்போது ரஜினிக்கு இருக்கும் 'சூப்பர் ஸ்டார்' பிம்பத்தை 80களில் உடன் இருந்து செதுக்கியவர்கள். இன்றும் அரசியலுக்கு வருகிறாரோ இல்லையோ, அது சார்ந்த இந்தக் கூட்டங்களை அவர்களை வைத்தே தொடங்குகிறார்.

எஸ் பி முத்துராமன், ரஜினியை வைத்து மட்டும் 25 படங்கள் வரை எடுத்துள்ளார். ஆறிலிருந்து அறுபதுவரை, மனிதன், வேலைக்காரன், தர்மத்தின் தலைவன் போன்று பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். ரஜினி என்றால் மாஸ், அவருக்கென்று ரசிகர் கூட்டம் என்று உருவாக இவரும் முக்கிய பங்காற்றி செயல்பட்டவர். இவர் மே மாத ரசிகர் சந்திப்புக் கூட்டத்தில் 'ரஜினி கேமரா முன்புதான் நடிப்பார். மற்ற நேரத்தில் நடிக்கத் தெரியாதவர், உண்மையானவர், புகழைக்கொண்டு போய் தலையில் வைத்துக்கொள்ளாத மனிதர், அவரை அவதூறாக பேசிக்கொள்கிறார்கள், அவர் யாருக்கு எவ்வாறு கொடுக்க வேண்டுமோ அப்படிக் கொடுப்பவர்' என்று ரஜினியின் வள்ளல் தன்மையை விளக்கினார். தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமென ரஜினி மனதில் இருப்பதாகவும் அதை அவர் கண்டிப்பாக செய்வார் என்றும் தெரிவித்தார்.

இயக்குனர் மகேந்திரன், தற்போது வரை எல்லோராலும் அதிகம் பேசப்படும் கதாபாத்திரமான 'முள்ளும் மலரும் காளி'யை கொடுத்தவர். பாலச்சந்தர் ரஜினியிடம் ஒரு விழாவில், " நீங்கள் வேலை செய்த பழைய இயக்குனர்களில் யாருடன் தற்போது மீண்டும் வேலை செய்ய ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டதற்கு ரஜினி, " மகேந்திரன்" என்று சொன்னார். அவர் இன்று நடந்த கூட்டத்தில் பேசுகையில், " ரஜினி நிதானமானவர், எந்த ஒரு விஷயத்திலும் யோசித்து இறங்கக் கூடியவர். அவரை உடனடியாகக் கூப்பிடாதீர்கள். வருவார், பொறுமையாக வருவார். இன்று நாளை என்று அவசரப்படுத்தாதீர்கள்" என்றார்.
அடுத்தவர், ரஜினியை வில்லனாக மட்டும் பார்த்தவர்கள் மத்தியில், ரஜினிக்குள்ளிருந்த நாயகனை பார்த்து 'பைரவி' படம் மூலம் கதாநாயகனாக்கியவர். பின்னர் கலைஞானம் சிக்கலில் இருக்கையில், 'அருணாச்சலம்' படத்தில் தயாரிப்பாளராக்கி அதில் லாபம் கொடுத்து உதவினார் ரஜினி. கலைஞானம் ரஜினியை பற்றி இந்த மேடையில் கூறுகையில், " நம்ப தலைவர் ஒரு காரியத்தில் இறங்கும்போது ஆயிரம் முறை சிந்திப்பார், எல்லோர் சொல்வதையும் கேட்டுக்கொள்வார், அதன் பின் ஒரு முடிவு எடுத்துட்டார்னா பின் வாங்கவே மாட்டார்" என்றார்.

ரஜினி நடித்த 'படையப்பா' படத்தில் ஒரு நகைச்சுவை காட்சி பிரபலம். செந்தில் பெண் பார்க்கப் போகும் போது ரஜினியின் உடையை அணிந்திருப்பார். எதிர்படுபவர்களிடமெல்லாம், 'மாப்பிள்ளை இவர் தான், இவர் போட்டிருக்கும் உடை என்னுடையது' என்பார் ரஜினி. அதுபோல, இவர்கள் ரஜினியின் குணத்தையும் பண்புகளையும் பேசுவது, அவரது அரசியல் வருகை குறித்து ரஜினியின் கருத்தை பேசுவது போல இருக்கிறது. ரஜினி அழைத்தால், இந்த நிகழ்ச்சிக்கு தற்போதைய இளம் இயக்குனர்கள் யாராயிருந்தாலும் வரத் தயாராகவே இருப்பார்கள். ஆனாலும் ரஜினியின் 'சூப்பர் ஸ்டார்' பிம்பத்தை சினிமாவில் செதுக்கியவர்களான இவர்களை வைத்தே அரசியலுக்கும் செதுக்க நினைக்கிறார் என்றே தோன்றுகிறது. தன் மனதில் உள்ளவற்றை இவர்கள் வழியே பேசி, ரசிகர்களை பொறுமையாகவும், அதே நேரம் தான் அரசியலுக்கு வருவேன் என்ற நம்பிக்கையை தக்க வைக்கவும் ரஜினி முயல்கிறார். கமல், விஜய், விஷால் என ரஜினியை விட வேகமாக பலரும் அரசியலை நெருங்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ரஜினி இன்னும் கிளம்பவேயில்லை. தமிழக மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரது அரசியல் வரவைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்தி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமே கவலை கொள்ளும் நிலையில், இந்த டிசம்பர் 31 அறிவிப்பு வந்துவிடுமா இல்லை, இன்று போய் நாளை வா என்ற பழைய கதையாகிவிடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சந்தோஷ் குமார்