
அரசு கட்டிடங்களுக்கு பசுக்களின் சாணத்தை அடிப்படையாகக் கொண்டு இயற்கை வண்ணப்பூச்சுக்களைப் பயன்படுத்த வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. நேற்று அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய யோகி ஆதித்யநாத்திடம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறையின் செயல்பாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனை மதிப்பாய்வு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத், பசு பாதுகாப்பு மையங்களை தன்னிறைவு பெற உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய யோகி ஆதித்யநாத், ‘உத்தரபிரதேசத்தின் கிராமப்புற பொருளாதாரத்தின் முக்கிய தூணாக கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள மேம்பாடு அமைந்துள்ளது. வாழ்வாதாரம், ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பெண்கள் அதிகாரமளிப்பதற்கான வழிகளாக இவை அமைந்துள்ளன. பசு பாதுகாப்பு மையங்களை தன்னிறைவு பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அரசு கட்டிடங்களில் பசு சாணத்தை அடிப்படையாகக் கொண்ட இயற்கை வண்ணப்பூச்சு பயன்படுத்தப்பட வேண்டும். அதோடு அதன் உற்பத்தியையும் அதிகரிக்க வேண்டும்.
பசு கொட்டகைகளில் பராமரிப்பாளர்களை பணியமர்த்தி சரியான நேரத்தில் பணம் செலுத்துதல், உமி கரைகளை நிறுவுதல் மற்றும் போதுமான அளவு தண்ணீர், பசுந்தீவனம் மற்றும் தவிடு ஆகியவற்றை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். கால்நடைகள் இல்லாத ஏழைக் குடும்பங்களுக்கு, பசு சேவையை மேம்படுத்த வேண்டும். பால் கிடைப்பதன் மூலம் வீட்டு ஊட்டச்சத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முக்யமந்திரி நிராஷ்ரித் கோவன்ஷ் சஹ்யோகிதா யோஜனாவின் கீழ், பசுக்களை வழங்கவும் வேண்டும்” என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.