Condemnation of Prime Minister Modi  for Canada hindu temple issue

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஆண்டு ஜூன் 18ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து, கனடா நாட்டு குடிமகனான நிஜாரின் படுகொலைக்கு இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டிற்கு இந்தியா மறுப்பு தெரிவித்து கடும் கண்டனம் தெரிவித்தது. அந்த வேளையில், கனடாவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரியைக் கனடாவை விட்டு வெளியேறுமாறு கனடா வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியாவில் உள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறுமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

Advertisment

இதற்கிடையே, கனடாவில் உள்ள சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைத்து வன்முறை, மிரட்டல், உளவுத்துறை தகவல்கள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டிருந்ததாகக் கனடா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் துணை அமைச்சர் டேவிட் மோரிசன் குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தினார். இத்தகைய பரபரப்பான சூழலில் தான் கனடா நாட்டின் டொரண்டோ மாகாணத்திற்கும் உட்பட்ட பிராம்டன் பகுதியில் இந்து சபா கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலில் நேற்று (03.11.2024) பெண்கள், குழந்தைகள் எனப் பலரும் சாமி தரிசனம் செய்தது கொண்டிருந்தனர். அப்போது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கோயிலில் இருந்த பக்தர்கள் மீது, தாக்குதல் நடத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்நிலையில் இந்த சம்பவத்திற்குப் பிரதமர் மோடி பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “கனடாவில் உள்ள இந்து கோவில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இது நட்பு நாடுகளுடனான நல்லுறவைச் சீர்குலைக்கும் முயற்சி ஆகும். இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனமாக்காது. கனடா அரசு நீதியை நிலைநாட்டும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ வெளியிட்டிருந்த சமூக வலைத்தளப்பதிவில், “பிராம்டனில் உள்ள இந்து சபா கோயிலில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஒவ்வொரு கனடா நாட்டவருக்கும் தங்கள் நம்பிக்கையைச் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. சமூகத்தைப் பாதுகாக்கவும், இந்தச் சம்பவத்தை விசாரித்து விரைவாகப் பதிலளித்த பீல் பிராந்திய காவல்துறைக்கு நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.